வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.