கொரோனா நெருக்கடி நிலையை அடுத்து ஹற்றன் நகரில் அனைத்து கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டதையடுத்து கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஹற்றன்-டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட ஹற்றன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு, பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களைக் கொள்வனவு செய்து வந்தவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், நகரம் முடக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் ஹற்றன் நகரில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக திரண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹற்றன் பொலிஸாருடன் நகர சபையும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது கடைக் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, ஹற்றன் நகரசபை ஊடாக நகரத்தில் மீன் கடைத் தொகுதிகளிலும் ஏனைய வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.