”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்த கருணா அம்மான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் தனது மைத்துனரான அலிசாஹிர் மௌலானாவையும்அன்வர் ஹாஜியாரையும் காட்டிக்கொடுத்துள்ளார்”
கே.பாலா
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதன் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தும் பிரபாகரனுக்கு அடுத்தவராக தமிழ் மக்களினால் நேசிக்கப்பட்டும் போர்களை நடத்துவதில் சிறந்ததொரு தளபதியாக செயற்ப ட் டும் விடுதலைப்புலிகளினாலும் தமிழ் மக்களினாலும் ”கருணா அம்மான்”என அன்புடன் அழைக்கப்பட்டும் வந்த நிலையில் பிரபாகரனுக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் செய்த துரோகம் ,காட்டிக்கொடுப்பினால் இன்றுவரை ”துரோகி’என அடையாளப்படுத்தப்பட்டு வரும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கருணா அம்மான் மீண்டும் ஒரு காட்டிக்கொடுப்பை செய்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவரையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்த கருணா அம்மான் 20 வருடங்கள் கழித்து தற்போது பிரபாகரனையும் தமிழ் மக்களையும் தான் காட்டிக்கொடுக்கக் காரணம் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கதான் என பொது வெளியில் பகிரங்கமாகக்கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் தன்னை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து வந்தவர்கள் அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பி.யும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யுமான அலிசாஹிர் மௌலானாவும், இன்னொருவரான அன்வர் ஹாஜியாரும்தான் எனவும் கூறி காட்டிக்கொடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் கருணா அம்மான் தியாகத்தினதும் வீரத்தினதும் புகழினதும் உச்சியில் இருந்தவர். இலங்கை இராணுவத்தினருக்கும் இராணுவத்தளபதிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வைத்த பெயர்தான் கருணா அம்மான். 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடியவர்.விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண விசேட கட்டளைத் தளபதியாக செயற்பட்டவர். சந்திரிகா -ரணில் அரசில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சு வார்த்தைக் காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்.
அப்போது அரசுடனும் புலனாய்வுத்துறையினருடனும் ஏற்பட்ட இரகசிய உறவின் காரணத்தால் ”விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தருவதில்லை , கிழக்குப் போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் ”என்று புலிகளின் தலைமை மீது குற்றம்சாட்டி பிரதேசவாதக் கருத்தை முன்வைத்து பிரபாகரனுக்கும் தமிழ் மக்களுக்கும் போராட்டத்தில் விதையான ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் போராடிக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கும் துரோகம் செய்து காட்டிக்கொடுத்து விட்டு 2003 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி அரசின் அதி உச்ச பாதுகாப்பில் கொழும்பிலும் பின்னர் வெளிநாடுகளிலும் வாழ்ந்த நிலையில் மீண்டும் இலங்கை திரும்பினார் .
தனது மாகாணமான கிழக்கு மாகாணத்திற்கு திரும்பிய கருணா அம்மான் ”தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்” எனும் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டு இலங்கை அரசின் ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார்.ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் இலங்கை அரசியலில் நுழைந்த கருணா அம்மான் 2008 அக்டோபர் 7 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் 9 மார்ச் 2009 ஆம்திகதி தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி மைத்திரி பாலசிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.அவருக்கு அக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக பதவி வழங்கப்பட்டது.
ஆனால் காட்டிக்கொடுப்புக்கும் துரோகத்துக்கும் பெயர்பெற்றவரான கருணா அம்மான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவையும் அவரது கட்சியையும் காட்டிக்கொடுத்துவிட்டு மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு தாவினார். மீண்டும் 2010 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி.யான அவருக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதும் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது விடுதலைப்புலிகளுக்கு இந்திய இராணுவ காலத்தில் உதவிய அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் காட்டிக் கொடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஐ.தே .க எம்.பி.யான சுஜீவ சேனசிங்க முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது,
”சுஜீவ சேனசிங்க எம்.பி. எப்பொழுது பார்த்தாலும் என்னுடைய பெயரைக் பாராளுமன்றத்தில் குறிப்பிடும் போது ‘கருணா அம்மான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்’ , ‘கருணா அம்மான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துள்ளார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். ஆம் அது மிகவும் சரியானது. இந்நேரத்தில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், அது என்னவென்றால் தற்போது இங்கு எமக்கு முன்னால் இருக்கின்ற ஜே.வி.பி கட்சியினர் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருக்கும் போது ஏன் நான் இருக்கக்கூடாது.
நான் வரலாற்றினை தற்போது சிறிதளவில் கூற விரும்புகிறேன். சிரேஷ்ட எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இங்கு அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வரலாற்றில் இலங்கையில் என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக தெரியும். எனினும் வரலாற்றினை நானும் கொஞ்சம் தட்டிப்பார்க்க விரும்புகிறேன். உதாரணமாக 1989 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் 350 விடுதலைப்புலிகள் இயக்கத்தினரே எஞ்சி இருந்தனர். ஏனையோர் அனைவரும் இறந்தும் இயக்கத்தினை விட்டும் சென்றுவிட்டனர்.
அப்போது எமது நாட்டின் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சியிலிருந்தார். நாட்டை ஒழுங்கமைப்போடும் சிறப்போடும் கொண்டு செல்லும் பணி அவரது கையில் காணப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரேமதாஸ தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு மிகவும் பலமாக காணப்பட்டார். அந்நேரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை இவர் வழங்கியிருந்தார். ஆயுதங்களை மட்டுமன்றி கோடிக்கணக்கான பண பலத்தினையும் இவரே வழங்கியிருந்தார். இவரது உதவியினால் மட்டுமே 350 ஆகக்காணப்பட்ட விடுதலைப்புலிகளின் தொகை 3 மாதத்தில் மட்டும் 6000 ஆக உயர்ந்தது. இது தான் வரலாற்றில் இடம்பெற்றது. உங்களுக்கு வரலாறு பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தான் நான் கூறுகிறேன் .புலிகள் பற்றி கதைக்கும் போது எனது பெயரை நீங்கள் சேர்க்கத் தேவையில்லை. அவ்வாறு நீங்கள் எனது பெயரை சேர்ப்பீர்களேயானால் நான் இவ்வாறாக ஒவ்வொரு ரகசியத்தினையும் வெளிக்கொண்டு வருவேன்” என ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிகொடுத்திருந்தார் .
பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து 2020 ஆம் ஆண்டு பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் மட்டு – அம்பாறை ஒருங்கிணைப்பாளராக கருணா அம்மான் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக கருணா அம்மான் தன்னை அறிவித்துக்கொண்டார் .எனினும் கருணா அம்மானுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை .இதனால் அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்க வேண்டி ஏற்பட்டது.அண்மைக்காலமாக அவரின் செயற்பாடுகள் காணாமல் போயிருந்த நிலையில்தான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றேன் என்ற கோஷத்துடன் மீண்டும் வெளிப்பட்ட கருணா அம்மான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அலிசாஹிர் மௌலானா மற்றும் , அன்வர் ஹாஜியார் ஆகியோரையும் காட்டிக்கொடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச ,அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து பிரசாரங்களில் ஈடுபட்டபோதும் கருணாஅம்மான் தலைகாட்டவில்லை .கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த நிலையிலேயே வெளியே வந்த கருணா அம்மான் கூட்டமொன்றில் பேசுகையில்,
”விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் .நான் புலிகள் அமைப்பிலிருந்து பிரிய நினைத்தபோது ரணில் விக்கிரமசிங்கதான் என்னை கொழும்புக்கு வரவழைத்தார்.2003ஆம் ஆண்டு நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து என்னை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துச் சென்றவர்கள் அலிசாஹிர் மௌலானாவும், அன்வர் ஹாஜியாரும்தான். அன்வர் ஹாஜியாரின் வாகனத்தில் தான் நான் வந்தேன். அந்த இருவராலும் தான் நான் அன்று காப்பாற்றப்பட்டேன் இந்த உண்மை இப்போது வரை யாருக்கும் தெரியாது. பலரும் மஹிந்த ராஜபக்சதான் பிரித்தார் கோத்தபாய ராஜபக்ஸ்தான் அழைத்தார் என்று கூறுகின்றனர் .அது தவறு என்னை புலிகள் அமைப்பிலிருந்து வெளியே வரவழைத்தவர் ரணில் விக்கிரமசிங்க தான் ”என்று கூறியே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு துரோகத்தனத்தையும் காட்டிக்கொடுப்பையும் செய்துள்ளார்.
தற்போது விடுதலைப்புலிகளை பிளவு படுத்தி தன்னை பிரித்தது ரணில் விக்கிரமசிங்க தான் என்பதை கருணா அம்மானே பகிரங்கமாக கூறியுள்ள நிலையில், 2020 பாராளுமன்றத்தேர்தல் காலகட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவரான மனோ கணேசன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த அந்த தருணங்கள் பற்றிய பதிவொன்றை தனது முகநூலில் ”புலிகளும் ரணிலும் மகிந்தவும் நானும் கருணாவும் மௌலானாவும்” என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார் அவர் தனது பதிவில்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன்.நான் விடுதலைப் புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போது அரசாங்கத்தில் “செகண்ட்-இன்- கொமாண்ட் ” ஆக இருந்த அமைச்சர் கரு ஜெயசூர்யவிடம் எனது பயணத்தை பற்றி கூறி சென்றிருந்தேன்.
ஜனாதிபதி சந்திரிகா ஒரு தகவலை கொண்டு சென்று புலிகளின் தலைவரிடம் சேர்க்க சொன்னார் என்று கருவிடம் முன்னமே கூறி இருதேன்.கரு மூலமாக எனது கிளிநொச்சி பயணத்தை அறிந்த ரணில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது சந்திப்பு பற்றி அறிய விரும்பினார்.அதே சமயத்தில் கிளிநொச்சி சென்று புலிகளின் தலைவரை என்னைப் போலவே சந்தித்த அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமான் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரிடமும் ரணில் கதை விட்டு தகவல்கள் பிடுங்கி இருக்கலாம்.
எனது சந்திப்பு பற்றி என்னுடன் ரணிலுக்கு பேசி அறிய வேண்டிய தேவை இருந்ததை போல எனக்கும் ரணிலுடன் இது பற்றி பேச வேண்டிய தேவை இருந்தது. புலிகளின் தலைவர் “ரணிலுக்கு சொல்லுங்கள்!” என்று எனக்கு சொன்ன செய்தியை நான் பிரதமர் ரணிலிடம் கூற வேண்டும் அல்லவா?
விடுதலைப் புலிகள் தலைவரால் சொல்லப்பட்ட, கருணா அம்மான் தொடர்பான விடயத்தை அவர் சொன்ன மாதிரியே நான் ரணிலிடம் சொன்னேன். “அலிசாஹிர் மௌலானா மூலமாக கருணா அம்மானை கொழும்புக்கு கூட்டி வந்தீர்கள். இன்று அவரை கொழும்பிலே இரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ” என்று பிரபா கூறியதை அப்படியே ரணிலிடம் கூறினேன்.
நான் இதை சொன்ன பொழுது ரணிலின் அறையில் நானும் ரணிலும் மட்டும்தான் இருந்தோம். மேசையின் அந்த பக்கம் ரணில். இந்த பக்கம் நான். ரணில் என் முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்.பிறகு பிரபாவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார். கருணா அம்மான் தானாகவே பிரபாவுடன் முரண்பட்டு சண்டையிட்டுக்கொண்டதாகவும்தான் தனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்ததாக ரணில் என்னிடம் சொன்னார்.
இப்பொழுது எனது சந்தர்ப்பம். நான் சற்று நேரம் ரணில் முகத்தை உற்று பார்த்துக்கொண்டு இருந்தேன். இல்லை, இல்லை என்று மறுத்து நாட்டின் பிரதமருடன் விவாதம் செய்ய வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.“இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. மிஸ்டர் பிரபாகரன் அப்படித்தான் உங்களுக்கு சொல்ல சொன்னார்.” என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறத் தொடங்கினேன்.
அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர் ரணில் கதவுப் பிடியில் கைவைத்து கதவை திறக்க முற்பட்ட என்னை அழைத்து, அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்தபடியே “உண்மையிலேயே பிரபாகரன் அவ்வாறு கூறினாரா?” என்று கேட்டார்.நான் கதவுக்கு அருகில் நின்றபடியே “ஆம்!” என்று வார்த்தையாலும் தலை அசைத்தும் கூறிவிட்டு பிரதமர் அறையில் இருந்து வெளியேறினேன்.
அடுத்து வந்த நாட்களில் சில சம்பவங்கள் நடந்தன. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி .யாக இருந்த அலிசாஹிர் மௌலானா தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்தார். அதன் பின்னர் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார்.இந்த முடிவுகளுக்கு பின்னால் பிரதமர் ரணில் இருந்ததை நான் ஊகித்துக்கொண்டேன்.அப்போது அலிசாஹிர் ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி உறுப்பினர். அவரது தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். இப்போது அலிசாஹிர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். இப்பொழுது அவரது தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீம்.
விடுதலை புலிகள் அரசியல் சிறுவர்கள் கிடையாது. அவர்களை யாரும் திட்டமிட்டு பிரிக்க முடியாது. அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத்தான் அடுத்தவர்கள் பயன்படுத்த முடியும்.ஆகவே புலிகளின் தலைவர் தனது கிழக்கு மாகாண தளபதியை தனது அமைப்பில் இருந்து வெளியேற்றினார். இதையே கருணா அம்மானிடம் கேட்டால் என்னை யாரும் வெளியேற்றவில்லை நானே தான் வெளியேறினேன் என்று கூறுவார். அது அவரவர் நிலைபாடுகள்.
இலங்கை பிரதமர் என்ற முறையிலே ரணில் விக்கிரமசிங்க கருணா அம்மான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிவதை விரும்பியிருப்பார். பிரிந்த கருணாவை தனது எம்.பி. மௌலானா ஊடாக கொழும்பிற்கு கொண்டு வந்திருப்பார்.இது பின்நாட்களில் கருணா அம்மானை பயன்படுத்தி புலிகளை தோற்கடிக்க ராஜபக்ச அரசாங்கத்திற்கு வழி சமைத்தது.
இதிலே தூரதிஷ்டசாலிகள் இரண்டு பேர். ஒருவர் பிரதமர் ரணில். அடுத்தவர் புலிகளின் தலைவர் பிரபா. தான் புலிகளின் பிரதான தளபதியை பிரித்து புலிகளை பலவீனப்படுத்தி அவர்கள் தோல்வியடைவதற்கு பெரும் காரணகர்த்தா என்று தன்னை சிங்கள மக்கள் மத்தியிலே சந்தைப்படுத்திக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முடியவில்லை. இது ரணிலின் தூரதிஷ்டம்.அதே போல ரணிலை தோற்கடித்து அதன் மூலம் கொழும்பிலே ஒரு சிங்கள தேசியவாத அரசாங்கம் உருவாகினால்தான் தமிழ் ஈழத்திற்கான தமது பயணம் இலகுவாகும் என புலிகளின் தலைவர் பிரபாகரன் தவறாக கணக்கு போட்டு விட்டார். இது அவரது தூரதிஷ்டம் ” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்த கருணா அம்மான் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் தனது மைத்துனரான அலிசாஹிர் மௌலானாவையும் (இருவரினதும் மனைவிகள் தமிழ் சகோதரிகள்), அன்வர் ஹாஜியாரையும் காட்டிக்கொடுத்து துரோகம் செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க ,தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்று விட வேண்டுமென பெரும் பிரயத்தனம் செய்துவரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்வதாக நினைத்துக்கொண்டு கருணா அம்மான் வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தியுள்ள ”புலிகளிடமிருந்து ரணில் விக்கிரமசிங்க தான் என்னை பிரித்தார்”என்ற விடயம் ரணில் விக்கிரமசிங்கவுக் கு ஆதரவான தமிழர் வாக்கு வங்கிக்கு வைத்த வெடிகுண்டாகவே இருக்கப் போகின்றது.