ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(30-06-2024)
மன்னார் மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு எதிர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியாக எமது கட்சியின் செயல் பாடுகளை விரிவு படுத்தி செயல்பட உள்ளோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டமும்,சமகால அரசியல் கருத்தமர்வு 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் எஸ்.வேந்தன் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு எதிர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு,அரசியல் ரீதியாக எமது கட்சியின் செயல் பாடுகளை விரிவு படுத்தி செயல்பட உள்ளோம்.
இக்கூட்டத்தின் போது முன்னாள் போராளிகளின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதும் முன்னாள் போராளிகள் சமகால அரசியல் களத்தில் ஒரு ஜனநாயக வெற்றியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை தொடர்பாக அவர்களினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் எதிர்வரும் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியேறிய போராளிகள் அரசியல் ரீதியாக எதிர் வரும் காலத்திலே ஒன்றிணைந்து ஒரு வெற்றிக்காக அனைவரும் செயல் பட வேண்டும்.
எமது முன்னால் போராளிகள் தமது பிரதேசங்களில் எதிர் வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகமைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் மாத்திரம் இல்லாது சமூக கட்டமைப்புடனும் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
குறித்த கட்சியின் அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து கலந்துரையாடி பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு ஒற்றுமையான முடிவை மேற்கொள்ளுவோம்.
எதிர்வரும் காலங்களில் பொது அமைப்புக்களுடன் இணைந்தும் பொது வேட்பாளர் குறித்து கலந்துரையாடி வெகு விரைவில் முடிவுக்கு வருவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.