வவுனியா- இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்த போது அவருடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடியுள்ளனர்.
இதன்போது மரத்தின் அடியில் மண்ணில் புதையுண்டு கிடந்த கைக்குண்டு ஒன்றை எடுத்த சிறுவர்கள் விளையாடிய போது அது வெடித்து சிதறியது. அதில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே காயமடைந்தவர்களாவர். இது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.