ஜனாதிபதி கோட்டாபாய இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக நிறுவப்பட்ட தொல்பொருள் தொடர்பான செயலணி பற்றிய அச்சம் தோன்றிய நிலையில் சில வாரங்களுக்கு முன்னர், அங்கு முன்னாள் அரசாங்க அதிபர் ஒரு அரச காணி தொடர்பான பிரச்சனையில், அவர் நேரடியாக தலையிட்ட காரணத்தால், அவர் அரசாங்க அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொழும்புக்கு ஒரு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்ட விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடரும் ஆபத்து தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்கள் என தொல்பொருள் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு அவற்றை அளவை மேற்கொண்டு எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அதன் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விசேட குழு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க. கருணாகரணை இன்று (26) மாவட்ட செலயகத்தில் வைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டது.
இக்குழுவின் முதற்கட்ட செயற்பாடாக ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 102 இடங்களைப் பார்வையிட்டு அளவை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு முன்னர் குறித்த பிரதேச செயலாளரை அணுகி சம்மந்தப்பட்ட பிரிவு கிராம சேவகர், அதனோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் ஆலோசனை மற்றும் முடிவுகளுக்கமைவாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார்.