சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று சொல்வதில் தவறிருக்க முடியாது.
நாட்டிலேயே அதிகப்படியான சோதனைச் சாவடிகள், அதிகரித்த இராணுவப் பிரசன்னம், நெருக்கடிகளுக்கிடையே வாழும் மீனவ சமூகம் எனப் பட்டியல் தொடரும்.
இங்கிருக்கும் மக்களுக்காக ஒரு உதாரண முன்னெடுப்பாக மைத்திரி-ரணில் அரசில் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள சஜித் பிரேமதாஸ முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரிவில் ஒரு மாதிரி கிராமத்தை அமைக்க உறுதியளித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட போது இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார் சஜித் பிரேமதாச. ஆனால் இந்த மாதிரி கிராமம் இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முத்தையன்கட்டுக்குளம் கிராமம் போர்க்காலப் பேரழிவுகளுக்கு ஒரு சாட்சி. போர் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் அங்குள்ள பெரும்பாலான மக்கள் போரின் வடுக்கள் மற்றும் மனரீதியான பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.
இங்குள்ள மீனவர்களுக்கு வாழ்வாதாரம் என்பது சூனியமாகியுள்ளது, அவர்களது அன்றாட வாழ்வாதாரம் மிகப்பெரும் சவால்களைக் கொண்டதாகவுள்ளது என்று அங்கு சென்று வந்த தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.
அந்தக் கிராமத்திலுள்ள மக்களுக்கு வீடு என்பது தலைக்கு மேலே இரண்டு தகரங்களும் சுற்றிலும் நான்கு தகரங்களும் அவ்வளவே. போரினால் சீரழிந்த வீடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாத நிலையில் அங்குள்ள மக்கள் உள்ளனர் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச அங்குள்ள மீனவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலமாக 20 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமத்தை அமைக்க அனுமதியளித்தார்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக கால் ஏக்கர் நிலம் அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்பட்டு ஆரம்பகட்டமாக 250,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதைக் கொண்டு பயனாளிகள் வீடுகளைக் கட்டும் பணியைத் தொடங்கினர்.
கைவிடப்பட்ட நிலை
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாறவும் காட்சிகளும் மாற ஆரம்பித்தன. சஜித் பிரேமதாசவால் வீடுகட்ட உறுதியளிக்கப்பட்ட அடுத்தகட்ட நிதியுதவிகள் கிடைக்காத சூழலில் வீட்டுத் திட்டம் முடங்கிப் போனது. அது மட்டுமின்றி முதல் தவணையாக அளிக்கப்பட்ட பணத்தில் முன்னெடுக்கப்பட்ட அடிப்படை பணிகளும் பருவ மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவை தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளதை அங்கிருந்து கிடைக்கப்பெற்றப் படங்கள் காட்டுகின்றன.
பெரும் இக்கட்டுக்கு இடையே வாழ்ந்து வரும் அந்த `மாதிரி கிராமத்தின்` மீனவர்கள் பருவ மழை மற்று இயற்கை இன்னல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறினால் தமக்கு வீடு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் எனும் அச்சம் காரணமாக அங்கு தொடர்ந்து இருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷ்கள் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் எனும் நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று ஜீவநகர் `மாதிரி கிராம` கூறுகின்றனர். அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள்.
சொல்லொணா துன்பங்கள்
இருக்கும் இடத்தைவிட்டு வெளியேறினால் கிடைக்கக் கூடிய வீடும் கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சம் காரணமாக அந்த கிராம மக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கத் தன்மானத்தை விட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு ஒதுங்க வேண்டிய துர்பாக்கியமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சிறார்கள், பெண்கள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோர் கடும் கோடை மற்றும் மழைக் காலங்களில் இதனால் சொல்லொணா துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி அரசு தமக்கு மலசலக்கூட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தியாவசியத் தேவையான இதற்கு அப்பாற்பட்டு சாலை வசதிகளும் சீரான மின்சார விநியோகமின்மையும் அவர்களது அன்றாட வாழ்க்கையை மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளது. அடிப்படை வாழ்வாதார தேவைகளில் ஒன்றான குடிநீருக்கு அவர்கள் குறைந்தபட்சம் அரை கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. பொதுக் கிணற்றில் பல நேரங்களில் நீர் மிகவும் ஆழத்தில் உள்ளதால் அதுவும் பிரச்சனையாக இருக்கிறது என்கிறார்கள் அந்த `மாதிரி கிராமத்தை` எதிர்நோக்கியுள்ள மீனவ மக்கள். தமது பகுதியில் பொதுக் கிணறு இல்லாததால் இதர தேவைகளுக்காக வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதற்கு அப்பாற்பட்டு வறுமைக்கிடையே குடிநீரை வில்லை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தாங்கள் உள்ளதாக `உதயனிடம்` பேசிய சிலர் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காலத்தில் சுத்தமான குடிநீர் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமக்கு சுகாதாரம் பற்றிய கவலைகள் உள்ளன என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
“நடவடிக்கை எடுக்கப்படுகிறது“
எனினும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கே.விமலநாதன் இந்தப் பிரச்சனைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளன என்கிறார். “ஜீவநகர் பகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டி முடிக்கப்படாத வீடுகள் மற்றும் குடிநீர், சாலைகள், மின்சாரம், மலசலக் கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை மற்றும் அவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சொல்லொணா துன்பங்கள் எமது பார்வைக்கு வந்துள்ளன“.
தனது அதிகாரிகளுடன் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் கண்டறிந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர். “அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. முடிந்தால் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ அங்கு பொதுக் கிணறு தோண்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், அதேபோல மலசலகூட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.“
சாலைகள் அமைக்கவும், மின்சார விநியோகத்தை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறும் அவர், அதற்கான நிதியைக் கோரியுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கும் என்கிறார்.
அச்சத்தில் வாழ்க்கை
நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அரசு கூறினாலும், மக்களிடையே அவநம்பிக்கை வெளிப்படுகிறது. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் விஷப் பூச்சிகள் மற்றும் காட்டு மிருகங்களினால் ஏற்படக் கூடிய அச்சத்திலேயே தாங்கள் வாழ்வதாக அவர்கள் `உதயனிடம்` கூறினார்கள்.
“இப்போதுள்ள குடிசை வீடுகளும் காட்டு யானைகளால் சேதமாக்கப்படுகின்றன, விவசாயப் பொருட்களும் அவைகளால் உண்ணப்படுகின்றன“ என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
புதிய அரசில் வெங்காயத்துக்கும், வெற்றிலைக்கும் அமைச்சுகள் ஏற்படுத்தப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்படும் நிலையில், இருபது வீடுகளைக் கொண்ட மிகச்சிறிய `மாதிரி கிராமம்` திட்டத்துக்கு போதிய நிதியை அரசால் ஏன் ஒதுக்க முடியாது என்று ஜீவநகர் மக்கள் வினவுகின்றனர்.
“எமது வாழ்வாதாரம் அரசியலில் சிக்கித் தவிக்கிறது“. உள்ளூர் அரசியல்வாதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தமக்காக போதிய அளவில் குரல் கொடுப்பதில்லை என்கிறார்கள் முத்தையன்கட்டுப் பகுதி மக்கள்.
கண்டா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, சுவிஸ் போன்ற நாடுகளிலுள்ள ஈழத் தமிழர்கள் தமக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். போர்க் காலத்துக்குப் பிறகு தாங்கள் `மறக்கப்பட்ட சனங்களாகவே` இருக்கிறோம் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான அனைவரும் ஒருமித்த குரலில் தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர். போர்க் காலத்தில் தமது குடும்பத்தார் செய்த பங்களிப்புகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மறந்துவிட்டனர் என்று பலர் தெரிவித்தனர்.
இது கசப்பான உண்மை என்பதை ஏற்காமல் இருக்க முடியாது.
முல்லைத்தீவு மக்களைப் பொருத்தவரை `பட்ட காலிலேயே படும்` என்பதை யதார்த்தமாகப் பார்க்க முடிகிறது.