கர்நாடகாவில் வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றில் கோடாரியால் வெட்டி பூஜை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உடல் பாகங்களில் தீராத வலிகளுடன் வரும் பக்தர்கள் குணமடைய வினோத வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி தீராத உடல் வலியுடன் வரும் பக்தர்கள் இந்த கோயிலில் உள்ள பூசாரி ஜக்கப்பா கட்டா என்பவரிடம் தங்களது பிரச்சினையை தெரிவிக்கின்றனர். அப்போது கற்பூரம் கரைத்த வெந்நீரை வலி ஏற்பட்ட இடத்தில் ஊற்றி, அங்கு பூசாரி கடப்பாரையால் வெட்டி பின் அதில் மஞ்சள் பொடி தூவி கட்டு கட்டி அனுப்புகிறார். இதன் மூலம் வலி குணமாகி விடுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இந்நிலையில் வயிற்று வலி என வந்த வாலிபருக்கு பூஜாரி ஜக்கப்பா கட்டா, அவரது பாணியில் சிகிச்சை அளிக்கும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காணொளியில் தீராத வயிற்று வலியுடன் வந்த வாலிபரை தரையில் படுக்க வைத்து, இரண்டு பேர் கை மற்றும் கால்களை பிடித்துக் கொள்கிறார்கள். அதன் பின் பூஜாரி தான் கையில் வைத்துள்ள கோடாரியால் வாலிபரின் வயிற்றில் இரண்டு முறை
வெட்டுகிறார். அதில் கோடாரி வயிற்றை கிழித்துக்கொண்டு உள்ளே சென்று ரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதன் பின் பூசாரி மஞ்சள் பொடியை தூவி வயிற்றில் கட்டு போடுகிறார். இந்த காணொளி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் லோகாபுரா காவல்துறை வழக்கு பதிவு செய்து, பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவத்துறை பல்வேறு வளர்ச்சிகளை அடைந்தாலும், உயிருடன் இருக்கும் நபரை கோடாரியாள் வெட்டும் இது போன்ற மூடநம்பிக்கைகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.