கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைக்காக தனிப்படை காவல்துறை ஐதராபாத் விரைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (70 ). ஓய்வு பெற்ற மருந்தாளுனரான இவரது மனைவி
கமலேஸ்வரி வயது (60). இவர்களுக்கு சுகந்தகுமார் (40) என்ற மகனும் நிஷாந்த்(8) என்கிற பேரனும் இருந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் புகை வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியினர் பார்த்து நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பொதுமக்கள் அளித்தபேரில் நெல்லிக்குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், கதவில் இருந்த பூட்டை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமார், நிஷாந்த் ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 3 பேர் உடலை மீட்டனர். இந்நிலையில், உயிரிழந்த சுகந்தகுமார் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தனிப்படை காவல்துறை ஐதராபாத் விரைந்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கைபேசிகளின் தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.