கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், மாண்டியா, உத்தரகான்ட், தட்சண கன்னடா, உடுப்பி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதி தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் காவேரி ஆற்றில் வெளியேற்றப்பட்டன. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாகவும், தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது.
மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரானது திறந்து விடப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16 வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் தனியார் விடுதிகளை ஆற்று நீர் வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் 2 லட்சத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுக்கும் பட்சத்தில் கரையோர பகுதியில் வாழும் குடியிருப்புகளை சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தும் சூழல் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.