நடராசா லோகதயாளன்.
இன்று எமது கையிலே ஆயுதம் இல்லை. இதற்காக தமிழ் மக்கள் பொருளாதாரத்தை ஆயுதமாக எடுக்க வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கறுப்பு ஜீலை நிகழ்வின் 41ஆம் ஆண்டு நினைவு கூறல் யாழில் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திலே வழமையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் இருப்பினும் நான் இம்முறை யாழ்ப்பாணத்தில் பங்கேற்கின்றேன்.
கறுப்பு ஜீலை நிகழ்வுகள் 1983ஆம் ஆண்டு இடம்பெற்றது.
நானோ 1990 ஆம் ஆண்டுதான் பிறந்தேன். பிறக்க முதல் இடம்பெற்ற வரலாற்றை அறிந்துள்ளோம். நாட்டின் அரசினால் வடக்கு கிழக்கு உள்பட பல வன்முறைச் சம்பவங்கள் இடப்பெற்றன.
இது இன்றும் தொடர்கின்றது. அது பல வடிவில் நடக்கின்றது. இதில் அதிக விடயங்களை நாம் தடுத்தும் உள்ளோம் குறிப்பாக மட்டக்களப்பில் தேர்தலிற்கு பின்பு மகாவலி அதிகார சபையால் 10 ஆயிரம் பேர் குடியேற்றம், வனவளம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு ஊடான நில அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை தடுத்தோம். எதுவுமே செய்யவில்லை எனக் கூறமுடியாது.
இதேநேரம் இந்த நாட்டில் கடற்றொழில் அமைச்சராக தமிழ் அமைச்சர் இருப்பதனால் தமிழ் மீனவர்களிற்குப் பிரச்சணை இல்லை என சிங்கள மீனவர்கள் நினைக்கின்றனர். உண்மையில் தமிழ் அமைச்சர் இருப்பதே தமிழ் மீனவர்களிற்கான பெரிய பிரச்சணை.
இவை இவ்வாறிருக்க இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் என்பது வாக்களிக்கும் வரை தேர்தல் நடக்குமா என்றால் அது எனக்கு சந்தேகம்தான்.
இந்த ஜனாதிபதி வந்த பின்பு காணி விடுவோம் என்பர் ஆனாலும் காணி பிடிக்கின்றனர்.
இராணுவ முகாமை எடுப்போம் என்பர் ஆனால் முகாமிற்கு காணி எடுப்பர் அவ்வாறானால் என்னதான் நடக்கின்றது.
இவை இவ்வாறானால் நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றால் 2005 இற்குப் பின்பு இரஜபக்சாக்கள் இல்லாத ஒரு தேர்தலாக இம்முறை இடம்பெறும் தேர்தலாக அமையும்.
இன்று எமது கையிலே ஆயுதம் இல்லை. இதற்காக தமிழ் மக்கள் பொருளாதாரத்தை ஆயுதமாக எடுக்க வேண்டும் என்றார்.