நடராசா லோகதயாளன்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதும், அவர்கள் கைது செய்யப்பட்டு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படும் வழமையான விடயமாகிவிட்டது.
அவ்வகையில் வட பகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 64 இந்திய மீனவர்களில் 20 பேர் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் 11 படகுகளில் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களின் 11 வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
இதில் 4 வழக்குகளின் 25 மீனவர்களிற்கு எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்க மறியல் நீடிக்கப்பட்டது. இதேபோன்று இரு வழக்குகளின் 13 மீனவர்களிற்கு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.
5 வழக்குகளின் 26 மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பளிக்கப்பட்ட 26 மீனவர்களில் மூவர் இரண்டாவது தடவை எல்லை தாண்டியமையினால் அவர்கள் மூவரதண்டணையுடன் ஓர் ஆண்டு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டதோடு 3 படகுகளின் உரிமையாளர்கள் படகில் இருந்தமையினால் படகுகள் அரச உடமை ஆக்கப்படுவதோடு தலா 4 மில்லியன் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டது.
குற்றப்பணம் விதிக்கப்பட்டவர்கள் அதனை செலுத்த தவறினால் தலா 6 மாத சிறைத் தண்டணை அனுபவிக்க வேண்டும் எனவும் எஞ்சிய 20 மீனவர்களிற்கும் 5 ஆண்டுகளிற்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டணையுடன் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.