சிவா பரமேஸ்வரன்
அவர் ஈழத்தமிழர்களின் அவலத்தை விற்று காசாக்கியவர் இல்லை. அந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவரும் இல்லை. அந்த மக்களுக்காக நான் போராடுகிறேன், எனக்கு நிதி கொடுங்கள் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கையேந்தியது இல்லை. பிரபாகரன் படத்தைப் போட்டு கட்சி நடத்தியவரும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இலங்கையில் இருக்க முடியாது என்று கூறி மேற்குலக நாடுகளில் தஞ்சம் கோரியவரும் இல்லை. சுருங்கச் சொன்னால் விக்ரமபாகு கருணாரட்ன ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை”.
கலாநிதி (முனைவர்) விக்ரமபாகு கரணாரட்ன பிறப்பில் சிங்களவராக இருந்தாலும், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களின் பக்கம் நின்று அவர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை ஆதரித்து அதிலிருந்து இறுதிவரை மாறாதவர்.
இன்று ஈழ மக்களை ஒரு பணம் காய்ச்சி மரமாக கருதி, அவர்களின் போராட்டத்தை ஒரு வர்த்தகப் பொருளாக்கி அதன் மூலம் தமது வாழ்வையும், வயிறையும் வளர்த்துக்கொள்பவர்கள் மத்தியில் இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள சமூகத்தில் பிறந்து தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தார் என்பதை தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் அறிவார்கள்?
கடந்த வாரம் வயது முதிர்ச்சி காரணமாக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81 ஆவது வயதில் காலமானார். அவருக்கு உதட்டளவிலான அஞ்சலி ஒரு சிலரால் தமிழகத்தில் செலுத்தப்பட்டது. அடிப்படையில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன ஒரு கல்விமான். உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் கலாநிதி பட்டம் பெற்றவர். இலங்கையின் முன்னணி இடதுசாரி தலைவர்களில் ஒருவர். நவ சம சமாஜ கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இலங்கையில் தமக்கே உரித்தான தனி தேசமாக வாழ்வதற்கு உரிமையுடையவர்கள் என்று மிகவும் தைரியமாக பொதுவெளியில் பேசி வந்தவர். அவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததில்லை. ஆனாலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பாலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) இயகத்தை ஏற்படுத்தி அதன் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்குபெற்றவர் விக்ரமபாகு கருணாரட்ண. ஆனால், அந்த மாநாட்டில் இந்தியா குறித்து விமர்சனங்களை வைத்ததால் அவர் பேசுவதிலிருந்து தடுக்கப்பட்டது வரலாறு. இது நடந்தது 12 ஆகஸ்ட் 2012 சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில்.
இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்திற்கு பகுதியளவில் இந்தியாவே பொறுப்பு என்று அவர் பேசியதை அடுத்து அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அப்போது பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி. நாராயணசாமி “இலங்கையில் தமிழ் பிரிவினைவாதிகளை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது” என்று கூறினார். அப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலு அமைச்சராக இருந்தார். இலங்கை அரசியல் சாசனத்தில் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசின் முன்னெடுப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் (இலங்கை வாழ் தமிழர்களுக்க்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் சட்டத் திருத்தம்) பிழையானது என்று அம்மாநாட்டில் பங்குபெற்ற புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் கூறியதை அடுத்து, அவர்கள் அப்படியான விமர்சனத்தை தவிர்க்குமாறு கூறப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் அழைப்பின் பேரிலேயே அவர் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அவருக்கான விசா அனுமதியை இந்திய அரசு மறுத்த போது திமுக தலைவரின் பரிந்துரையை அடுத்தே அவருக்கு இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டது. இதெல்லாம் ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பிலான வரலாற்றின் ஒரு பகுதி.
இலங்கையில் நடைபெற்ற போரை “ இனப்படுகொலை” என்று சென்னை மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதை ஈழ வியாபாரிகள் அறிந்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி. இதை கூற வேண்டியதற்கான காரணமும் உள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு ஓரளவிற்கு வலுவாக இடதுசாரி இயக்கங்கள் படிப்படியாக பலமிழந்து சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களின் அரசியல் அபிலாஷைகளை அடக்கி ஒடுக்க முற்பட்டன் விளைவே ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.
பெருபாலான சிங்கள அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அவர்கள் தரப்பில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவர்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களில் எவ்வளவு பேர் அவரது வாழ்நாளில் அவரைப்பற்றி பேசியிருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.