நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (ஆக. 5) நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகராட்சிக்கு திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.