அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை திமுக உறுதிபடுத்தவில்லை. கடந்த ஜூலை 20-ம் தேதி திமுக இளைஞரணி கூட்டத்தின் போது இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது, துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் முதலமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்” என விளக்கம் அளித்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என பதிலளித்தார்.