வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் தற்காலிக அனுமதி கோரியதன்பேரில் ஷேக் ஹசீனா இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று இந்தியாவுக்கு வந்தார். இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் ஷேக் ஹசீனா இந்தியா வர தற்காலிக அனுமதி கோரினார். அதன்படி, அவரது வேண்டுகோளுக்கு இணங்க அனுமதி வழங்கப்பட்டது. எந்தவித முன்னைறிவிப்பும் இன்றியே அவர் இந்தியா வந்துள்ளார். ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. மிக குறுகிய நேரத்தில், அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி கோரினார்.
வங்கதேச அதிகாரிகளிடமிருந்தும் விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது. வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் அவருக்கு இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை அவர் டில்லி வந்தார். தூதரகம் மூலமாக வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19,000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஜூலையில் இந்தியா திரும்பிவிட்டனர். அங்குள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு குழுக்கள், அமைப்புகள் முயற்சியில் உள்ளன. அதுகுறித்த அறிக்கைகளும் உள்ளன. வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீராகும் வரை கண்காணிப்பில் இருப்போம். வங்கதேச அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அங்குள்ள சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா முயற்சி எடுக்கும் என்றார்.