இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்படுத்தல் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. சுகாதார அமைச்சர் அதற்கான மருந்து தொடர்பாக முதலில் வெளியிட்ட கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசுக்கெதிரான போராட்டத்தில் இலங்கை தாதியர் சங்கம்-ஆவணப்படம்
அனைத்தும் இராணுவத்தின் கையில் எனும் நிலையில் நாடு சென்று கொண்டிருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் தொற்றுக்கு ஆளான சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு தொடர்பிலான பெரும்பாலான முன்னெடுப்புகள் இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் வைத்திய நிபுணர்கள், தாதிகள், இதர சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் தொற்றுநோயைக் கையாளும் பணி இப்போது இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தலும் இராணுவத்தால் அங்கீகரிப்பட வேண்டுமென்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்
சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத்தினர் தலையிடக் கூடாது என்று இலங்கையின் தாதிமார் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

இலங்கை தாதியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்
நோய் தொற்று தொடர்பில் சந்தேகத்திற்கிடமான சுகாதார ஊழியர்களை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பக் கூடாதென்று தாதிமார் தொழிற்சங்கள் கோரியுள்ளது.
இராணுவத்தின் அப்படியான முன்னெடுப்பு சுகாதார சேவைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இதர நோயாளிகளுடன் தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களை வைத்தியசாலையில் சேர்ப்பது அத்தியாவசியப் பணியாளர்களின் உடல் மற்றும் உள நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் என்கிறது அந்தச் சங்கம்.
“சுகாதாரப் பணியாளர்கள் வைத்திய முறைகளை அறிந்தவர்கள். அவர்கள் ஒரு வைத்தியராக, ஒரு தாதியராகச் செயல்படுகின்றனர். நோய் பற்றிய புரிதலும் அறிவும் அவர்களுக்குண்டு. எனவே அவர்களை ஏனைய நோயாளர்களைப் போல் நடத்த வேண்டிய அவசியமில்லை. தொற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகள் சுகாதாரப் பணியார்களுக்குத் தெரியும். அது மாத்திரம் இல்லாமல் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவர்களுக்குத் தெரியும்” என்று தாதிமார் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே சுகாதாரப் பணியாளர்களுக்கு வேண்டிய வசதிகளை பெற்றுத்தர வேண்டியது அரசின் கடமை என்று அரச தாதியர் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரட்ணபிரிய அரசிடம் வேண்டியுள்ளார்.
சுகாதாரப் பணியார்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதில் பாதுகாப்புப் படையினர் தலையிட வேண்டாமென்று அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களுக்கு நோய் தொற்றுப் பரவாமல் எப்படித் தடுப்பது என்பது தெரியும், எனவே இதில் இராணுவமோ, பொலிசாரோ தலையிட வேண்டாமென்று சமன் ரட்ணபிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தரப்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முதலில் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள், அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவத் தளபதி கூறுகின்றார்.
“இனிவரும் காலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாலும், அவர்கள் முதலில் நெருக்கமானவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்”.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் இராணுவத்தினர்
எனவே சுகாதாரப் பணியாளர்களும் அதே வழியில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாக இராணுவத் தளபதி கூறுகிறார்.
ஆனாலும் முன்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் போது இராணுவத்தினர் மக்களை பரவலாக நெருக்கடிக்குள் தள்ளினர் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது