ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில் இருந்து சிறுபான்மை மக்களான ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மத ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் அதிகமானோர் வங்காள தேசத்தில் குடியேறி வருகின்றனர். 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தப்பி சென்றுள்ளனர். மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள் சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன. இதில் உயிர் தப்பிய 3 பேர் கூறும்போது, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளனர்.