நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. இதில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சித்திரகுப்தனும் எமனும் கலந்த ஒரு கதாபாத்திரமாக வரும் கதாநாயகனாக நானி. ஒரு பக்கம் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் காட்டும் அவர், இன்னொரு பக்கம் அதிரடியாக மாஸ் ஆக்ஷன் அவதாரம் எடுத்து கவனிக்க வைக்கிறார். ஆனால் முன்னோட்டத்தின்படி படத்தின் உண்மையான கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யாவாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு மூன்று நிமிட முன்னோட்டத்திலேயே தனது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் மூலம் அதகளப்படுத்தி இருக்கிறார்.
