-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.30:
மலேசியா, மலேசியாவை அடுத்துள்ள் சிங்கப்பூர் நாடுகளைக் கடந்து, தமிழினத்தின் தொப்புள்கொடி உறவுகள் படர்ந்துள்ள நாடுகள் எங்கெங்கும் தமிழியக் கூறுகளையும் விழுமியங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாட்டை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை கொண்டுள்ளது என்று அதன் புதிய தலைவர் சு. மணிமாறன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மூத்த உயர்க்கல்வி நிறுவனமான மலாயா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்திய ஆய்வியல் துறையின் 15-ஆவது தலைவராக முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம் பொறுப்பேற்றுள்ளார்.
மலேசிய இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் தாய்மொழி, வியர்வைவும் இரத்தமும் ஒன்றெனக் கலந்த தோட்டப்புற வாழ்க்கையின் தாக்கம், பண்பாடு, ஆன்மிகம், பன்னாட்டு கலாச்சாரம், அரசியல் தாக்கம், இசை உள்ளிட்ட கலை வடிவம் என யாவும் பிரதிபலிக்கும் மரபுசார் மையமாக விளங்குகிறது இந்திய ஆய்வியல் துறை.
ஆனாலும் இதன் வடிவமும் கட்டமைப்பும் மிகச் சிறியதுதான்.
17 புலங்களை உள்ளடக்கியது இந்த உயர்க் கல்வி – கலாச்சாலை. இந்த பதினேழு புலங்களில் ஒன்றான மொழிப்புலத்தில் 12 துறைகள் இடம்பெற்றுள்ளன. இப்பன்னிரண்டு துறைகளில் ஒன்றுதான் இந்திய ஆய்வியல் துறை. இருந்தபோதும், இதன் பிம்பம் இத்தனை அளவிற்கு பிரமாண்டமாக காட்சி அளிப்பதற்கும் தோற்றம் பெறுவதற்கும் அதன் பங்களிப்புதான் காரணம்.
இந்தத் துறையை வழிநடத்தி வந்துள்ள் தலைவர்கள், மாணவர்களின் கல்வி என்னும் எல்லையைக் கடந்து, மலேசியவாழ் தமிழ் மக்களின் அத்துணைக் கூறுகளிலும் ஊடுறுவி, அவர்களின் அரசியல்-சமூக-பொருளியல் வாழ்வு சம்பந்தமான தளங்களிலும் தங்களின் மேலான பங்களிப்பை பங்கமின்றி வழங்கி வந்துள்ளனர்.
அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள மூத்த விரிவுரையாளரும் முனைவருமான சு.மணிமாறனை கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் வெளிவரும் உதயன் பருவ இதழ் வாழ்த்தி வரவேற்கிறது.
இதன் மேநாள் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், அப்பொறுப்பில் இருந்தும் பணியில் இருந்தும் ஓய்வு பெற்றதை அடுத்து முனைவர் மணிமாறன் இந்தத் தமிழாய்வியல் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பேற்று இருக்கிறார்.
கால சூழலுக்கு ஏற்ப நாட்டில் நிலவும் பல்வேறு மாற்றத்தை அவதானித்து, மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் தமிழ் மொழியின் அரணாகவும் இத்துறை தொடர்ந்து விளங்கும் வண்ணம் என்பணி தொடரும். அதற்கு ஏற்ப, என் முன்னோர்கள் வரையறுத்துள்ள பாதையை யொட்டி இடையறாது கடமை ஆற்றுவேன் என்று முனைவர் மணிமாறன் உதயன் இதழிடம் கருத்து தெரிவித்தார்.
இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் ஈராண்டுகளுக்கு பதவி வகிக்கப்போகும் இவர், “எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் இந்திய ஆய்வியல் துறையில் மேற்கொள்ளப்படும். பாடத் திட்டங்களை கவனத்தில் கொள்ளும் அதேவேளை, மாணவர்களின் எதிர்கால வாழ்வு குறித்தும் திட்டமிடப்படும். இதற்கு முந்தைய தலைவர்களும் தங்களால் ஆன அத்தனையையும் நிறைவேற்றி இருக்கின்ற வேளையில், நானும் என் பங்கிற்கு என்னால் ஆனமட்டில் கடமை ஆற்றுவேன்” என்று மணிமாறன் உதயனிடம் தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவில் இயங்கி வரும் ஒரே இந்திய ஆய்வியல் துறையான இதில், இதுவரை பேராசிரியர் இராஜாக்கண்ணு, பேராசிரியர் சேவியர் தனிநாயக அடிகளார், முனைவர் இராமசுப்பையா, பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு, முனைவர் தேவபூபதி நடராஜா, முனைவர் ரெ. ராஜு, முனைவர் ரா. இராஜாகிருஷ்ணன், முனைவர் சூசன் ஊர்ஜிதம், முனைவர் க. திலகவதி, பேராசிரியர் முனைவர் ந. கந்தசாமி, முனைவர் வே. சபாபதி, முனைவர். சு. குமரன், முனைவர் இரா. மோகனதாஸ், முனைவர் ம. கிருஷ்ணன் ஆகியோர் கடமை ஆற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் பதவியிலிருந்து இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் நேற்று பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த விரிவுரையாளர், முனைவர் மணிமாறன் சுப்ரமணியம் அத்துறைக்கு புதிய தலைவராக பெறுபேற்று இருக்கின்றார்.
காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் மலேசியவாழ் தமிழர்களின் அடையாளமாகவும் தமிழ் மொழிக்கு காவல் அரணாகவும் இத்துறை தொடர்ந்து விளங்கும் என்று முனைவர் மணிமாறன் சுப்ரமணியம் உறுதி அளித்துள்ளார்.
இந்தத் தமிழ்ப் பிரிவிற்கு எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் என ஆண்டுதோறும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அந்த வகையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 10-ஆவது பன்னாட்டு மாநாடு கடந்த 2007 ஜூலைத் திங்கள் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது.
அதில், 22-0702007இல் உரையாற்றிய கனடிய உதயன் பருவ இதழின் பொறுப்பாண்மை பிரதம ஆசிரியர் லோகேந்திர லிங்கன், சமய நல்லிணக்கம் தொடர்பான ஒரு கருத்தை முன் வைத்தார். இதுவரை எந்தத் தலைவரும் எங்கும் எந்த வேளையிலும் சொல்லாத செம்மாந்த கருத்து அது.
ஒரு மண்டபத்தில் நூறு தமிழர்கள் கூடி இருந்தார்கள் என்றால், உதாரணத்திற்கு அந்த நூறு தமிழர்களில் 99 பேர் சைவர்களாகவும் மற்றவர்களாகவும் இருந்து ஒரேயொருவர் கிறித்துவ தமிழராகவோ அல்லது இசுலாமியத் தமிழராகவோ இருந்தால் அந்த விழா மேடையில் இறை வணக்கம் பாடும்போது
‘தென்னாடு டைய சிவனே போற்றி’ என்று பாடக்கூடாது.
காரணம், பெரும்பான்மைத் தமிழர்கள் சிறுபான்மைத் தமிழரின் உணர்வை அலட்சியம் செய்வதாகவோ புறக்கணிப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது. வேண்டுமென்றால் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் இருந்து ஒரு சில குறள்களை கடவுள் வணக்க முறைக்கு பயன்படுத்தலாம் என்றார்.
இதைப்போன்று தமிழர்களின் பரந்த நோக்கம் கொண்ட பண்பாடு, கலாச்சாரம், மொழிப்பற்று உள்ளிட்ட கூறுகளை வெளிப்பட்டுத்தும் நிகழ்ச்சிகள், தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் முனைவர் மணிமாறன் தலைமையிலும் நடைபெறும் என்று எதிர்பார்ப்போம்.
கனட உதயன் ஏடு மீண்டும் வாழ்த்துகிறது விரிவுரையாளர் மணிமாறனை!.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24