கடந்த 11-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று அஜக்ஸ் மாநகரில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் ‘விளையாட்டுத்துறை சாதனையாளருக்கான’ விருதினைப் பெறுவதற்காக கனடாவிற்கு விசேடமாக அழைக்கப்பெற்றிருந்தவர் எமது தாயகத்தின் சர்வதேச ஓட்ட வீராங்கனை முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனன் ஆவார்.
அன்னாரை சிறப்பாக கௌரவிக்கும் முகமாக மார்க்கம் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பினர் நேற்று 14-08-2024 புதன்கிழமையன்று மாலை மார்க்கம் ஆர்மெடேல் சன சமூக நிலைய மண்டபத்தில் ஒரு சிறப்பு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கு மன்றத்தின் தலைவி சுந்தரேஸ்வரி யோகராஜா அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் மார்க்கம் மாநகரசபை உறுப்பினர் யுனைற்றா நாதன் அவர்களும் ‘உதயன்’ பத்திரிகை லோகேந்திரலிங்கம் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
அங்கு உரையாற்றிய Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா தனது உரையில்
“ஓட்ட வீராங்கனை முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனன் தனது அயராத உழைப்பினாலும் தொடர் பயிற்சியினாலும் உலக விளையாட்டு ரசிகர்கள் வியக்கும் வண்ணம் சாதனைகள் புரிந்துள்ளார். அவர் இலங்கையில் மாத்திரமல்ல ஜப்பான்-பிலிப்பைன்- தாய்லாந்து- இந்தியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்ற உலக ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களையும் பணப்பரிசுகளையும் பெற்றுள்ளார். அவ்வாற சாதனையாளரை கனடா வாழ் மக்கள் சார்பில் நாம் கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம்.'” என்று உரையாற்றிய பின்னர் பாராட்டு பத்திரம் வழங்கியும் பொற்கிழி வழங்கியும் வீராங்கனை அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனன் அவர்களைக் கௌரவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் மார்க்கம் மாநகரசபை உறுப்பினர் யுனைற்றா நாதன் அவர்களும் ‘உதயன்’ பத்திரிகை லோகேந்திரலிங்கம் ஆகியோரும் ‘கனடா வென்மேரி’ விருதைப் பெற்ற வீராங்கனை அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனன் அவர்களை வேறு பட்ட வகையில் பாராட்டி வாழ்த்துப் பத்திரங்களையும் வழங்கினார்கள்.
தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனன் அவர்களைப் பாராட்டி உரையாற்றினார்கள’
– சத்தியன்-