சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளரை தாக்கிய ரவுடியை காவல்துறை சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தி அருகேவுள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 12 வது குற்றவாளியாவார். அச்சமயம் அவர் 18 வயதிற்கு கீழே இருந்ததால் சிறார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இவர் மீது 5 கொலை வழக்கு உட்பட 18 வழக்குகளில் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் காலை காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு காரை சோதனையிடும்போது அதிலிருந்த அகிலன் என்பவர் சார்பு ஆய்வாளர் குகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் உடனடியாக தற்காப்பிற்காக ஆய்வாளர் ஆடிவேல் அவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து பார்த்தார். பிறகு சார்பு ஆய்வாளரிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை காவல்துறை சுட்டு பிடித்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.