ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2024 அன்று, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பௌதீக விஞ்ஞானத் துறை க.பொ.த உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது. வுனியாப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத் துறையின் மின்னணு ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வுனியா தெற்கு, வுனியா வடக்கு, மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பௌதீகவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சி பட்டறை, வுனியாப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு சி. குகநேசன் அவர்களால் ஒழுங்கமைக்க பட்டது. மேலும் இப்பயிற்சி பட்டறையின் வளவாளர்களாக திரு சி. குகநேசன் உட்பட பௌதீக விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி. கிருஷாந்த் மற்றும் விரிவுரையாளர் திரு. க. மதனாகரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் நடைமுறை அமர்வுகள் மூலம் மின்னணுவியல் துறையில் தங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கற்பிக்க தேவையான திறன்களை ஆசியர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இப் பயிற்சி பட்டறையை நிகழ்த்தினர், இது க.பொ.த உயர்தர தேர்வுகளில் இனிவரும் காலங்களில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதொரு பாடப்பகுதியாக காணப்படுகின்றது.
இந்தப் பயிலரங்கிற்கான மின்னணு சுற்றுகளின் மாதிரிகள், இங்கிலாந்தின் ரத்னம் அறக்கட்டளையின் (Ratnam Foundation) கணிசமான நிதியுதவியுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையால் வழங்கப்பட்டன. பௌதீகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் மின்னணுவியலில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்த அறக்கட்டளை முன்பும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைக்கு மின்னணு சுற்றுகளை நன்கொடையாக வழங்கியது குறிப்பிபடத்தக்கது.
ரத்னம் அறக்கட்டளையின் நிறுவனர் கலாநிதி ர. நித்தியானந்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் வருகை அன்றைய நாளின் சிறப்பு அம்சமாக இருந்தது. அவர்கள் பயிலரங்கு நடவடிக்கைகளை அவதானித்து, ஆசிரியர்களுக்கு ஊக்கமளிக்கும் அறிவுரைகளை வழங்கி, தற்போதைய பௌதீகவியல் பாடத்திட்டத்தில் மின்னணுவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா, பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி (திருமதி) ஜெ. நிமலன் மற்றும் பௌதீக விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி மா. கயாணன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்ட முறையான அமர்வுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது. இந்தப் பயிலரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வடமாகாணத்தில் பௌதீகவியல் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் இந்த பயிலரங்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும் மாணவர்கள் தங்கள் க.பொ.த உயர்தர தேர்வுகளில் மின்னணு சம்பந்தமான தேர்வு வினாக்காக்களுக்கு சிறந்த முறையில் தயாராவத்துக்கு உறுதுணை புரியும்.