மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம்சாட்டிய நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன், தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.
பின்னர் 2017-ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் இந்த தம்பதிக்கு பிறந்தன. தொடர்ந்து நமிதா பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நமீதா குற்றம் சாட்டி காணொளி வெளியிட்டுள்ளார். தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்திற்கு சென்ற நமிதாவை தடுத்து நிறுத்திய அதிகாரி முத்துராமன் என்பவர் நமிதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் கூறி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்தார். இதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக சென்றபோது என்னுடன் வந்தவர்களிடம் என்னை இஸ்லாமியரா? இந்துவா என கேட்டுள்ளனர். இந்து என்பதற்கான மதச்சான்று கேட்டுள்ளனர். மேலும், கைபேசி இல்லாத நிலையில் ஆதார் அட்டையை காண்பித்த பிறகும், 15 நிமிடமாக காத்திருக்க வைத்து பின் கோயிலுக்குள் அனுமதித்தனர். நான் கோயிலுக்கு வருவது குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளோம். இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்து சென்றேன். சான்றிதழ் கேட்டபோது எனது முகக்கவசத்தை எடுத்த பின்னரும் அதிகாரிகள் அவமரியாதையாக பேசினர். இதுபோன்று இனி யாருக்கும் நடக்காத வகையில் சரியான கோயில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம். மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இது போன்று நடந்துகொள்வதால் பக்தர்கள் மன வருந்துவார்கள்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.