பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் நடிகர் முகேஷ் பற்றி முன்னாள் மனைவி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். முகேசுடன் சேர்ந்து வாழ்ந்தபோது அனுபவித்த கொடுமைகளை நடிகை சரிதா பகிர்ந்துள்ளார். நான் கர்ப்பிணியாக இருந்தபோது சண்டை போட்டு என்னை வயிற்றில் அவர் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது ஒரு நல்ல நடிகை என்று அவர் கூறினார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒன்றாக இரவு உணவிற்கு சென்றோம். திரும்பி வரும்போது, நான் காரில் ஏற முயன்றபோது, அவர் என்னை ஏமாற்றிக்கொண்டே காரை முன்னும் பின்னுமாக எடுத்துச் சென்றார். காரின் பின்னால் ஓடும்போது நான் விழுந்தேன். கீழே உட்கார்ந்து அழுது விட்டேன்.
ஒருமுறை, அவர் நள்ளிரவில் குடிபோதையில் திரும்பியபோது, ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று நான் கேட்டேன். அவர் என்னை முடியை பிடித்து இழுத்து, தரையில் இழுத்து சென்று அடித்தார்,” என்று அவர் கூறினார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை” என சரிதா கூறி இருக்கிறார்.