தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கேவி தவராசா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 31ம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்குவதாக எடுத்த தீர்மானம் தொடர்பில் தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு எமது செய்தியாளர் கேட்டதற்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு கிடைத்தது அழைப்புடன் என்ன எனன விடையங்கள் பேசுவது தொடர்பில் எழுதி அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை ஒரு நாளில் தெரிவித்து மறுநாள் முடிவு எடுக்கக்கூடிய விடயங்களாக இருக்கவில்லை.
கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்ற போது பொது வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தாமல் நேரடியாக எதிர்ப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்ற கருத்தை முன்வைத்தேன்
அதுமட்டுமில்லாது தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்ற நிலையில் நாங்கள் எடுக்க முடிவு எமது கட்சியின் எதிர்கால அரசியலை பாதிக்காத முடிவுகளாக இருக்க வேண்டும்.
தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழ் பொது வேட்பாளருடனும் பேச்சுவார்த்தை நடாத்தாமல் அவரை விலகுமாறு கூறுவது ஏற்புடையது அல்ல என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன் .
ஏற்கனவே தமிழரசு கட்சி பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியத்துடன் பயணிப்பவர்கள் இணைந்து பயணிக்கின்ற நிலையில் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக முடிவுகளை எடுக்க முடியாது.
ஜனாதிபதி வேட்பாளர் விடையதில் கட்சி முடிவுகளை எல்லாம் பார்க்க மக்களின் விருப்பங்கள் அபிப்பிராயங்கள் கேட்டு அறித்த பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்த முடிவு எடுத்தப்பட்ட நேரத்தில் தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் சிறிநேசனும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆகவே வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அபிப்பிராயங்களை கேட்டறியாமல் தெற்கு வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பது தனக்கு உடன்பாடு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்