சென்ற ஆவணி மாதம் 24ம் திகதியன்று, Watersmeet Theatre, Rickmansworth, UK ல் செல்வி துர்க்கா குமணன் அவர்களின் வீணை அரங்கேற்றம் மிகவும் விமரிசையாக அரங்கேறியது. அன்று மிகப் பிரபலமான கலைஞர்கள் உட்பட பலவிதமான ரசிகர்கள் பங்குபற்றி அவரைப் புகழ்ந்து வாழ்த்தினார்கள்.
துர்க்காவின் அரங்கேற்றத்தின் முதல் பகுதியை அவர் தன்னம்பிக்கையுடன், மிகவும் ரசித்து எந்த விதமான பதட்டமும் இல்லாமல் சிறப்பாக ஆரம்பித்தார்.
அவர் வீணையில் மீட்டிய அத்தனை உருப்படிகளையும் ஒரு முதிரச்சி பெற்றவொரு கலைஞரின் நிதானத்துடன் வாசித்த விதம் எல்லோரையும் கவர்ந்தது. ராமநாதபுரம் ஶ்ரீநிவாச ஐயங்கார் இசையமைத்த கானடா ராகத்தில், கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த பாரம்பரிய வர்ணமான “நேர நம்மிதி” யுடன் கச்சேரி ஆரம்பித்து அதனைத் தொடந்து பேகடா ராகத்தில், ரூபக தாளத்தில் “வல்லப நாயக்க”, என்ற முத்துசுவாமி தீட்சதரின் கிருதியை மிகவும் அருமையாக பிள்ளையாருக்கு சமர்ப்பித்தார்.
இவரின் அரங்கேற்றத்தின் மகுடமாக சொல்லப்படக்கூடிய “இன்னமும் சந்தேக படலாமோ” என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய கீரவாணி ராகத்தில் அமைந்த கீரத்தனத்தின் ராக ஆலாபனையை மிகவும் விஸ்தாரமாகவும் வாசித்து பாட்டின் பாவம் குறையாமலும் சாகித்தியம் விளங்கும் விதமாகவும் கையாண்ட விதம் கலையர்களின் பாராட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வந்த கல்பனா ஸ்வரம் மிக நேர்த்தியாவும் பக்கவாத்தியத்திற்க்கு சவாலாக ஆவர்த்தனக் குறைப்புடன் அருமையாக வாசித்து அவரின் குருவுக்கும் பெருமை சேர்த்து தனது உயர்வான இசைத் திறனை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக ராகம் தானம் பல்லவி. துர்க்காவின் குருவான சங்கீத வித்வான் ஸ்ரீமதி சிவதாராணி சகாதேவன் அவர்கள் இயற்றிய திவி ராகப் பல்லவி. மோகனம், கல்யாண வசந்தம் ஆகிய இரண்டு ராகங்களையும், ராக பாவம் கலையாமல் விஸ்தாரமாக வாசித்து, இரண்டு ராகத்திலும் தானம் வாசித்த விதமும் அதனைத்தொடர்ந்து வந்த பல்லவியில் நிரவல் வாசித்து, திரிக்காலப்படுத்தி இரண்டு ராகத்திலும் மிஸ்ர குறைப்புடன் கூடிய தீர்மானத்துடன் மிகவும் துல்லியமாக வீணை வாசித்து சபையோரை மகிழ்வித்தார். இதனை அடுத்து வந்தது தனி ஆவர்த்தனம். இசை வல்லுநர்களான டாக்டர் அபிராம் சகாதேவன் ( மிருதங்கம்), ஶ்ரீ பிரகாக்ஷ் (கஞ்சிரா) ஶ்ரீ பிரதீப் (கடம்) அவர்கள் தமது இசை வித்தவத்தையும் தனித்துவத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தினர்.
கச்சேரியின் இரண்டாம் பகுதியில், துர்க்கா தனது அரங்கேற்றம் கண்ட மூத்த சகோதரிகளான டாக்டர் தீபிகா குமணன் மற்றும் சுபிக்கா குமணன் ஆகிய சகோதரிகளோடு ஒருங்கிணைந்து வெளிப்படுத்திய வீணை இசைத் திறமை கண்கொள்ளாக் காட்சி. இச் சகோதரிகள் இரண்டாம் பகுதியை ஒரு தனித்துவமானதும் ஈர்க்கக்கூடியதுமான இசை நிகழ்ச்சியாக மாற்றியது, ஒரு அற்புதமான இசை அனுபவத்தை உருவாக்கியது. சுப்ரமணிய பாரதியாரதியாரின் ராகமாலிகா, “சின்னஞ்சிறு கிளியே” யை சகோதரிகள் இணைந்து ராகப் பாவத்தோடு சிறப்பாக வழங்கி பார்வையாளர்களை வசீகரித்தார்கள். இறுதிப் பாடலானது ஸ்ரீ வீணை சேஷண்ணாவின் செஞ்சுருட்டி ராகத்திலும் ஆதி தாளத்திலும் அமைந்த விருவிருப்பான தில்லானா பாடலாகும். மூன்று சகோதரிகளும் இசைத்த இந்த தில்லானா உண்மையிலேயே பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்தது
ஒட்டுமொத்தமாக, வித்வானின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் துர்க்காவின் வீணை இசை பரந்த அளவிலான தாளங்கள் மற்றும் ராகங்களை உள்ளடக்கி, உயிரோட்டத்துடன் இசை அறிஞர்களையும் ரசிகர்களையும் மெய்மறக்க செய்தமை அவர்களின் கூற்றிலேயே வெளிப்பட்டது. இந்த இளம் வயதில் அவரின் இசை அறிவும் தான லய சுத்தமும் வியக்கத்தக்கதாக உள்ளது.