யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்
சில பேச்சாளர்கள் மேடையில் தங்கள் உரையைத் தொடங்கும் முன்னர் “எல்லோருக்கும் பொதுவான இறைவனை வணங்கி எனது பேச்சைத் தொடங்குகின்றேன்” என்பார்கள். இறைவன் ஒருவனே உலக மக்களுக்கு பொதுவானவன் என்ற கருத்து பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்ற வழக்கம் உள்ள எமது தற்போதைய வாழ்நாட்களில் கொரோனா என்னும் கொடிய நோயோடு போட்டி போடுவதா அல்லது சமரசம் செய்து வாழ்வதா என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேலும் சொல்லப்போனால் தற்போது கொரோனாவும்
இறைவனைப் போலவே, உலக மக்களுக்கு ‘பொதுவான’ ஒரு அச்சுறுத்தலாக விளங்குகின்றது
இவ்வாறான ஒரு இக்கட்டான வேளையில் இலங்கையில் உள்ள சமூக மற்றும் அரசியல் தொடர்பான தேவைகள் அல்லது அவசியம் என்பதை நாம் ஆராய வேண்யவர்களாக நாம் எம்மை தயார் செய்து கொள்ளவேண்டும். இலங்கையில் அதிகளவு பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கும் இன்றைய நிலையில், மக்கள் அனைவரும் பூரணமான ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே நோய்த் தொற்றை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமென இலங்கையின் சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இலங்கையில் உள்ள மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், அந்தந்த மாவட்டங்களின்; செயலாளர்கள் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்க அதிபர்களின் நாளாந்தப் பணிகள் இந்த ‘கொரோனாவோடே கழிந்து விடுகின்றதை நாம் நேரடியாகவே இங்கு பார்க்கின்றோம்.
இலங்கையில் ஏற்கனவே இரு தடவை தலைதூக்கிய அலைகளைப் போலன்றி, மூன்றாவது தடவை உருவெடுத்துள்ள கொரோனா அலை பாரதூரமாக உள்ளதனாலேயே மக்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது.இலங்கையில் முதன் முதலில் தோன்றிய அலையின் போது, நாட்டின் ஒரு சில இடங்களில் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இருந்த போதிலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முழு நாடுமே முடக்கப்பட்டதனாலும், அதிகாரிகள் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கைகளாலும், மக்களின் விழிப்புணர்வு காரணமாகவும் முதலாவது அலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்தக் கொரோனாவின் தாக்கம் ஆரம்பத்தில் இலங்கையில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, மற்றைய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளைப் போன்று இல்லாமல் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நலனையும் எதிர்காலத்தையும் பற்றி அக்கறை கொள்வதிலேயே கவனஞ் செலுத்துகின்றார்கள் என்பதை கவனிக்கத் தவறியிருக்க மாட்டோம்.
இலங்கையில் வாழும் மூன்று இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தங்கள் வாழ்க்கை தொடர்பாகவும் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பாகவும் பாதுகாப்பு தொடர்பாகவும் பல பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் அரசியல் தான் காரணம் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இங்கு அரசியல் என்பது அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதிலும், பின்னர் அந்தப் பதவிகளின் மூலம் தங்கள் வழித்தோன்றல்களையும் எதிர்காலத்தில் தாங்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களைத் தயார் படுத்துவதே அவர்கள் நோக்கமாக உள்ளது.
இதன் காரணமாகத் தான் அவர்கள் தேர்தல்களை நடத்துகின்றார். தங்கள் வேட்பாளர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அரச வளங்களைப் பயன்படுகின்றார்கள்.
ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மற்றும் பாதுகாப்பு வழங்கும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான சலுகைகளை வழங்குவதற்காக அரசின் பொருளாதாரம் பெருமளவு வீணடிக்கப்படுகின்றது.
ஆனால் சிங்கள மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. போராட்ட உணர்வுகொண்ட இடதுசாரி அரசியல்வாதிகள் சோரம் போனவர்களாக மாறிவிட்டார்கள். இதனால் போர்க்குணம் என்பது மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.
இதே போன்று தான் தமிழ் மக்களின் எநதப் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை அல்லது கவனிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். தமிழ் பேசும் அரசியல் வாதிகள் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக தமிழரசுக் கட்சியின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். மற்றவர்கள் அவரை தேர்ந்தெடுத்தாலும் அவரும் அந்தப் பதவியை விரும்பியே ஏற்றுள்ளனர். ஆனால் எவ்வாறு இந்த இரண்டு பதவிகளின் பொறுப்பான கடமைகளை அவர் நிறைவேற்றுவார் என்று அவரை தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எமது தமிழ் பேசும் அரசியலி கைதிகளைப்பற்றி ஒருவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுகள் பல கடந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கூக்குரல் எவருக்குமே கேட்பதாகத் தெரியவில்லை. தமிழ்பேசும் அரசியல் தலைவர்களோ அன்றி ஆட்சியில் உள்ள பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் திறந்த மனதுடன் செயலாற்றுவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை. அவர்களிடம் திறந்த மனது இல்லை. இன்னொரு வகையில் அவர்கள் அனைவரிடமும் ‘கஞ்சல் தனம்’ அதிகமாகவே உள்ளதையே நாம் நீண்ட காலமாகப் பார்க்கின்றோம். உண்மையாக கொலைகளைச் செய்த குற்றவாளிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குகின்றார். ஆனால் குற்றங்கள் எதுவும் செய்யாமல் சிறைகளில் பல ஆ ண்டுகளைக் கழித்து வரும் தமிழ் பேசும் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் அரசியல்வாதிகளுக்கே அக்கறை இல்லாமல் ‘கஞ்சல்தனம்’ புரிகின்றார்கள்.
இலங்கையில் சமூக மட்டத்திலும் அரசியலிலும் ஆட்சியிலும் இவ்வாறான நிலையே காரணமாக விளங்குகின்றது. இன்னொரு பக்கத்தில் கொரோனா என்னும் கடிதான நோய் இலங்கை எங்கும் அஞ்சல் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றது இலங்கையின் இராணுவ அரச இயந்திரம்.. இது மிகவும் ஒரு அநியாயமான செயல்..
இது இவ்வாறிருக்க, இன்னொரு பக்கத்தில், உண்மையில் இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சாதாரணமானது அல்ல. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஓரிரு தினங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து வைரஸ் தொற்றைப் பெற்றுக் கொண்ட மற்றையவர்கள் சமூகத்தில் எங்கெங்கு உள்ளனரென்று தேடிக் கண்டுபிடிப்பதென்பது இலகுவான காரியமல்ல.
இவ்வாறு கொரோனா தொற்று பரவுதலின் ‘வழித்தடம்’ அறிந்து தொற்றாளர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, சிகிச்சை வழங்கும் கடினமான பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பணியில் ஈடுபடுகின்ற அனைவருமே உண்மையில் அர்ப்பணிப்பு மிகுந்தவர்களாவர். கொரோனா நோய்த் தொற்று ஆபத்தை தாங்களும் எதிர்கொண்டபடியே அவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியாளர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களாவர். கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கூறுகின்ற அறிவுரைகளை உரியபடி பின்பற்றி நடந்து கொள்வதே மேற்படி பணியாளர்களுக்கு மக்கள் அளிக்கின்ற கௌரவமாக அமையும். அவர்கள் தங்களது உயிரையே பணயம் வைத்து கொரோனா ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற போது, பொதுமக்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வார்களானால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதென்பது இயலாத காரியமாகவே போய் விடலாம்.
பொதுச் சந்தைகள், விற்பனை நிலையங்கள், ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் அன்றாடம் நாம் காணுகின்ற காட்சிகள் உண்மையிலேயே ஒருவித அச்சத்தைத் தருவதாக உள்ளன. சமூக இடைவெளியென்பதை முற்றாகவே மறந்த நிலையில் மக்கள் நெருக்கமாக முண்டியடித்தபடி நிற்பதைக் காண முடிகின்றது. கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையெல்லாம் முற்றாக மறந்தவர்களாகவே பெருமளவான மக்கள் நடந்து கொள்வதைக் காண முடிகின்றது.
கொரோனா வைரஸ் ஒருவரில் இருந்து மற்றவருக்கு எவ்வாறு தொற்றிக் கொள்கின்றதென்பது குறித்து இனிமேலும் புதிதாக மக்களுக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. தொற்றாளர் சுவாசிக்கும் போது அல்லது இருமல், தும்முதலின் போது காற்றின் ஊடாகவும், நேரடித் தொடுகையின் மூலமாகவும் ஒருவரில் இருந்து மற்றையோருக்கு மிக இலகுவாகவே தொற்றிக் கொள்ளக் கூடிய விசேட இயல்பை கொரோனா வைரஸ் கொண்டிருக்கின்றது. அத்துடன் எமது வெளிச்சூழலில் நீண்ட நேரம் உயிர் வாழும் தன்மையும் கொவிட் 19 வைரஸுக்கு உள்ளது. எனவேதான் இந்த வைரஸ் உலகெங்கும் குறுகிய காலத்துக்குள் பல மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இலகுவாக தொற்றிக் கொண்டுள்ளதுடன் மாத்திரமன்றி, ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் உயிரை காவு கொண்டும் விட்டது.
முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியையும் சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பேணுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை பெருமளவில் கட்டுப்படுத்துமென்று உலக சுகாதார நிறுவனமே பல தடவை கூறியுள்ளது. சர்வதேச மருத்துவ அறிவியலாளர்களும் இவற்றையே பரிந்துரைக்கின்றனர்.
எனினும், இந்த அறிவுறுத்தல்களை குறித்த ஒரு பகுதியினர் மாத்திரம் கடைப்பிடிப்பதனாலும், ஏனையோர் அலட்சியப்படுத்துவதாலும் பயன் ஏற்பட்டு விடப் போவதில்லை. இங்கு ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.கொரோனா வைரஸை இலகுவில் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்பவர்களும், இந்த வைரஸை மிக இலகுவாக ஏனையோருக்கு பரப்பி விடுபவர்களும் வேறு யாருமல்ல!
பொதுவாகவே அரசியல் நிலைப்பாடுகளை கவனிப்பதிலோ அன்றி கொரோனா போன்ற சமூகத்திற்கு முக்கியமான அவசரகால செயற்பாடுகளின் போதோ, எமக்கு கிடைக்கின்ற ஆலோசனைகளை அலட்சியம் செய்தோமானால் அது இலங்கை என்னும் தேசத்திற்கும் இங்கு வாழும் மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நாம் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது..