”தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு ஆதரவு ,எதிர்காலத் தலைவர் ஸ்ரீதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு,தலைவர் போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு,துணைத் தலைவர் சிவஞானம் சஜித்துக்கு ஆதரவு.ஆனால் மேடையேற மாட்டார்.மத்தியகுழு உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளர்.இதுதான் இன்றைய தமிழரசுக்கட்சி.இந்தக்கட்சியை தமிழ்மக்கள் நம்பினால் தந்தை செல்வா சொன்னதுபோல் ”தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.”ஆனால் தமிழரசுக்குள் தேசியத்துக்கு எதிரானவர்கள் இருக்கும்வரை தமிழரசுக் கட்சியை கடவுளாலும் காப்பாற்ற முடியாது”
கே.பாலா
ஒரு வீட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகள்,பிணக்குகள் பிளவுகள் வீதிக்கு வந்தால் சந்தி சிரித்து விடும் என்பார்கள் .அதேபோன்றுதான் இன்று தமிழ் தேசியத்தின் தாய்க் கட்சி என பெருமை மட்டும் பேசிக்கொள்ளும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ”வீட்டுக்குள் ” நடக்கும் தலைக்கன அரசியல்,தான்தோன்றித்தன அரசியல்,காட்டிக்கொடுப்பு ,கழுத்தறுப்பு அரசியல்”கூட இருந்தே குழிபறிக்கும் அரசியல்,ஆமாம் சாமி”போடும் அரசியல்,அல்லக்கை அரசியல் ,முதுகெலும்பு இல்லாத அரசியலால் நடக்கும் சண்டையால் தமிழ் மக்கள் மட்டுமன்றி முழுநாடும் பார்த்து கைகொட்டி சிரிக்குமளவுக்கு ‘வீடு” இன்று வீதிக்கு வந்துள்ளது.
ஒரு வீட்டுக்குள் கூட்டுக் குடும்பம் இருந்தால் மாமாவுக்கும் மருமகனுக்கும் அல்லது மாமிக்கும் மருமகளுக்கும் எட்டாப்பொருத்தம் இருக்கும்.அல்லது மச்சான்மார் ,மச்சாள்மாருக்குள் பிணக்குகள் இருக்கும் .இல்லாதுவிட்டால் குழந்தைகளினாலாவது பெரியவர்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும். அந்த வகையில்தான் இன்று தமிழரசுக்கட்சியின் வீட்டுக்குள்ளும் தமிழ் தேசியத்துக்கு எதிரான சுமந்திரன் அணி,தமிழ் தேசியத்துக்கான ஸ்ரீதரன் அணி என இரு அணிகளுக்கிடையில் நடக்கும் பனிப்போரினால் ”வீடு”அதகளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒரு வீட்டுக்கு நல்லதொரு ஆளுமையுள்ள குடும்பத் தலைவன் இருந்தால்தான் அந்த வீட்டில் இருப்பவர்களை அயலவர்கள் . ஊர்மக்கள் மதிப்பார்கள்,ஆனால் தமிழரசுக்கட்சியின் வீட்டுக்கு ”பல்டி” அடிக்கும் அதுவும் சாதாரண ”பல்டி” அல்ல ”அந்தர் பல்டி”அடிக்கும் ஒரு தலைவர், பிள்ளைகள் செய்யும் குற்றங்களை தந்தைக்கு மறைத்து பிள்ளைகளை இன்னும் தவறு செய்யத்தூண்டும் மனைவிபோல் இருக்கும் துணைத் தலைவர் போன்றவர்களினால்தான் தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன்போல் தமிழரசுக்கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில்தான் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்க தமிழரசின் மத்திய குழு கூட்டப்பட்டது ஆனால் இந்த மத்தியகுழுக்கூட்டத்தில் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அல்லது புதிய தலைவராக கட்சியின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு ”உள்வீட்டு”சதியால் பதவி ஏற்காதிருக்கும் ஸ்ரீதரனோ பங்கேற்கவில்லை . இவர்களுடன் இன்னும் பலர் பங்கேற்காத நிலையில் தான் மத்திய குழுவை துணைத்தலைவர் சிவஞானம் தலைமையில் கூட்டிய சுமந்திரன் அணி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக்கட்சியின் மத்திய குழு ஏகமனதாக முடிவு என அறிவித்தது.
உடனடியாகவே இந்த தீர்மானத்தை நிராகரித்த தலைவர் மாவைசேனாதிராஜா ”இவ்வாறான தீர்மானம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது .இது கட்சியின் தீர்மானம் அல்ல” என அறிவித்தார். ஆனால் சுமந்திரன் விசுவாசியான துணைத் தலைவர் சிவஞானமோ ”மத்தியக்குழுவின் தீர்மானத்தை தலைவருக்கு அறிவிக்க வேண்டிய தேவை கிடையாது .அவ்வாறு அறிவிக்க வேண்டும் என யாப்பிலும் இல்லை”என விந்தையான காரணம் ஒன்றைக் கூறிவிட்டு சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை நான் ஆதரிக்கின்றேன்.ஆனால் சஜித்துக்கு ஆதரவாக எந்த மேடையிலும் ஏறமாட்டேன் எனவும் விசித்திர அறிவிப்பையும் விடுத்தார்.
இந்நிலையில் தலைவர் மாவை சேனாதிராஜா.மறுநாள் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மத்திய குழுவின் தீர்மானத்துடன் இணங்கிப் போகவேண்டும் என அறிவித்து ”பல்டி ”அடித்தார். அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ”பல்டி” தலைவரை யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் வீடுதேடிச்சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களை சந்தித்த ”பல்டி ”தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் மீண்டும் ஜனாதிபதியாவார் .அவர் பதவியேற்று 3 மாதங்களுக்குள் எமக்கு சமஷ்டி தீர்வை வழங்கவேண்டும் .அவர்தான் வெற்றிபெறுவார் ” எனக்கூறி அந்தர்”பல்டி”அடித்தார்.
ஆனால் ஸ்ரீதரனோ ஆரம்பம் முதலே ”எனது ஆதரவு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பளருக்குத்தான் ”என அறிவித்து அதில் இன்றுவரை உறுதியோடுமிருக்கின்றார். அதுமட்டுமன்றி தனது கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சியின் கிளையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்து தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார்.அதுபோன்றே திருகோணமலைமாவட்ட எம்.பி.யான குகதாசனும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் கிளையில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்து தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
இவ்வாறாக ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக சுமந்திரன் அணியும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக ஸ்ரீதரன் அணியும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தலைவர் மாவை சேனாதிராஜாவும் சஜித்தை ஆதரிக்கின்றேன் ஆனால் அவருக்காக மேடை ஏற மாட்டேன் என துணைத்தலைவர் சிவஞானமும் அறிவித்துள்ள நிலையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் யார்பக்கம் நிற்பது ,யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் விழிபிதுங்கி நிற்கின்றனர் . இன்று ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் ”வீடு’ 4 துண்டுகளாக உடைந்துபோயுள்ளது.
எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட 6பேர்கொண்ட குழு அறிக்கை சமர்ப்பிக்க முன்னரே இவர்கள் ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு வேட்பாளர்களை ஆதரித்து முடிகளை அறிவித்து விட்டமைதான் வேடிக்கையானது .
இவ்வாறு தமிழரசுக்கட்சி உடைந்து வீதிக்கு வந்துள்ள நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட 6 பேர்கொண்ட குழுவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிறிதரன் மற்றும் வடமாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோர் கூடிப்பேசினார் மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன் கலந்துகொள்ளவில்லை.
இந்த சந்திப்பில் முடிவில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் முடிவை அறிவிக்கும் இறுதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.வடிவேலு பாணியில் சொல்வதென்றால்”மறுபடியும் முதல்ல இருந்தா” என்று கேட்கத்தோன்றும் அறிவிப்பாகவே இது இருக்கின்றது.
”இந்த தேர்தலில் எங்களுடைய மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதற்காக எங்களுடைய கட்சி ரீதியான கொள்கை, எங்களுடைய இனப்பிரச்சினை தீர்வு, சமஷ்டி, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்மானங்கள், அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வேட்பாளராக உள்ள சஜித் பிரேமதாசவின் கருத்துக்கள் தேர்தல் அறிக்கை விடயங்களையும் நாங்கள் கருத்தில் கொண்டு, அதில் எங்களுக்கும் அவருக்கும் இணக்கம் ஏற்படக்கூடிய விடயங்களை அடையாளப்படுத்தி எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திதிக்கு முன்னதாக எங்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை தமிழ் மக்களுக்காக வெளியிடவுள்ளோம். அதற்கு முன்னர் சுமந்திரன் சஜித் பிரேமதசாவை சந்தித்து பேசுவார்
இந்த தேர்தல் தொடர்பில் கொள்கை அடிப்படையிலும் இனத்தின் விடுதலை அடிப்படையாகவும் அதேவேளை சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சார்பாகவும் அது தொடர்பில் எங்களுடைய கருத்துக்கள் என்ன என்பது தொடர்பிலும் அந்த அறிக்கையில் நாங்கள் குறிப்பிட இருக்கின்றோம். ஆகவே இந்த குழு மீண்டும் கூடி அந்த அறிக்கையை பத்திரிகையாளர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வெளியிடுவோம் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது.தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பேன் என சுமந்திரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
மலையக ,முஸ்லிம் கட்சிகள் எல்லாம் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணவு உடன்படிக்கை,ஒப்பந்தங்கள் செய்தே ஆதரவளிக்கும் நிலையில் தமிழரசுக்கட்சி எந்த வித புரிந்துணவு உடன்படிக்கையோ ,ஒப்பந்தமோ செய்யாது எழுந்தமானமாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தமையும் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது சஜித் பிரேமதாசவுடன்சுமந்திரன் பேசப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை பஸ் சென்றபின்னர் கைகாட்டுவது போன்றே உள்ளது .இது தமிழரசுக்கட்சி தலைவர்களினது அரசியல் முதிர்ச்சி ,சாணக்கியம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழரசுக்கட்சியினர் மத்தியிலும் அதிகரித்து வரும் ஆதரவினாலேயே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்ற முன்னைய ஒருபக்க தீர்மானம் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் சில உறுதிமொழிகளைப்பெற்று தமதுப்பக்க தீர்மானத்தை நியாயப்படுத்த சுமந்திரன் அணி முயற்சிப்பதாகவே தெரிகின்றது.அதேவேளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற அறிவிப்பை தமிழரசுக்கட்சி வெளியிட சுமந்திரன் அணி இணங்காது என்பதனால் எதிர்வரும் 14அல்லது 15 ஆம் திகதி தமிழரசுக்கட்சி வெளியிடவுள்ள அறிக்கையில் ”தமிழ் மக்கள் தாம் விரும்பிய ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்”என்ற பொதுப்பட்ட அறிவிப்பு ஒன்று வெளிவரவே வாய்ப்புள்ளது.