”நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றுள்ள 1கோடியே 71 இலட்சத்து 40354 வாக்காளர்களில் 1 கோடியே 50 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்களேயானால் அதில் 75 இலட்சம் வாக்குகளையாவது பெற வேண்டும். இவ்வாறான நிலையில் ரணில்,சஜித்தை தோற்கடித்து அநுர வெற்றிபெறுவாரானால் அது உண்மையில் இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாகவே அமைந்திருக்கும். அவ்வாறான ஒரு வெற்றிக்கு ”அரகலய” போன்றதையும் விட வலுவான மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்”
கே.பாலா
இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி ஆசனத்தில் அமரப்போவது யார் ?என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் வெளியிடப்பட்டாலும் அவை கட்சி அல்லது ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு சார்ந்த கருத்துக் கணிப்புக்களாகவே உள்ளன சில கருத்துக் கணிப்புகள் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புத் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான அதாவது முதலில் ஒருவர் முன்னணியில் இருப்பதாக கூறுவதும் பின்னர் அடுத்தமுறை கருத்துக் கணிப்பில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார் எனக் கூறுவதாகவுமே உள்ளன.
இவ்வாறு கருத்துக் கணிப்புகள் ஒருபக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் ,ஆதரவுக் கட்சிகளும் பிரசார மேடைகளிலும் ஊடக மாநாடுகளிலும் தமது வேட்பாளரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மேற்கொண்ட பிரசாரங்களும் வெளியிட்ட தகவல்களும் வெற்றி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன . அதிலும் ஒரு வேட்பாளரின் கட்சி தமது வேட்பாளரின் வெற்றியைகொண்டாட மக்களைத் தயாராக இருக்குமாறும் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் தோல்வியடைந்த வேட்பாளர்களை அவமரியாதைப் படுத்தக்கூடாதெனவும் கோரிக்கை விடுமளவுக்கு தமது வெற்றியில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் ஒருவர் மரணமடைந்து விட்டதனால் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தற்போதைய ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித்தலைவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனும் வேட்பாளருமான சஜித் பிரேமதாச,தேசிய மக்கள் சக்தி ,ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரும் வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான நாமல் ராஜபக்ச ஆகியோரிடையிலேயே பிரதான போட்டி இடம்பெறும் நிலையில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனும் இவர்களின் வெற்றி வாய்ப்பில் தாக்கம் செலுத்தக் கூடியதொரு வேட்பாளராகவே உருப்பெற்றுள்ளார்.
இந்த 38 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க இம்முறை இலங்கையின் 25 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 1கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தான் இவர்களில் அதிக வாக்குகளைப்பெற்று ரணில் விக்கிரமசிங்க தான் மீண்டும் ஜனாதிபதியாவார், இல்லை சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதியாவார் .இல்லை ,இல்லை இந்த முறை ஜே .வி.பி. அலை அடிப்பதனால் அநுர குமார திசாநாயக்க தான் ஜனாதிபதியாவார் ,யார் எதனைக் கூறினாலும் ராஜபக்சக்களுக்கென ஒரு வாக்கு வங்கி உள்ளது.அவர்கள் தமதுவெற்றிக்காக எதனையும் செய்யத்துணிந்தவர்கள் எனவே நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதி என்றவாறாக பல்வேறுபட்ட எதிர்வுகூறல்கள் வெளியிடப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களினதும் அவர்களின் கட்சிகளினதும் பங்காளிக் கட்சிகளினதும் சூறாவளிப் பிரசாரம் நாடு முழுவதும் சுற்றி சுழன்றடித்து புதன்கிழமை நள்ளிரவுடன் ஓய்ந்துவிட்ட நிலையில் எந்தவேட்பாளரை மக்கள் ஜனாதிபதி ஆசனத்தில் அமரவைக்கும் கள நிலைமைகள், வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்பில் கொஞ்சம் ஆராய்வோம்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அநுர குமார திசாநாயக்க,நாமல்ராஜபக்ச ஆகிய 4 பிரதான வேட்பாளர்களில் 4ஆவது வேட்பாளரான நாமல் ராஜபக்ச போட்டியில் இல்லை என்பதே உண்மை.அதேநேரம் ஏனைய 3 வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாச ,அநுர குமார திசாநாயக்கவிடையில்தான் கடுமையான போட்டியுள்ளது. இவர்களில் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வெற்றிபெறும் கள சூழல் இருந்தாலும் . அநுரகுமார திசநாயக்கவுக்கு தென்பகுதியில் அலை அடித்தாலும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்காளர்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளை அநுரகுமார திசாநாயக்க பெறுவதென்பது சாதாரண விடயமல்ல.இதற்கு கடந்த சில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் மீள் பார்வை செலுத்த வேண்டியது அவசியம் .
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் கோத்தபாய ராஜபக்ச,சஜித் பிரேமதாச ,அநுரகுமார திசாநாயக்க ஆகிய 3 வேட்பாளர்களே பிரதான போட்டியாளர்களாக இருந்தனர். இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 1 கோடியே 59 இலட்சத்து 92096 வாக்காளர்களில் 1 கோடியே 33 இலட்சத்து 87951 பேர் வாக்களித்த தேர்தல் முடிவுகளின்படி கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சத்து 24255 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார் .சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64239 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க 4இலட்சத்து 18553 வாக்களையுமே பெற்றிருந்தனர்.
இதில் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழ்,முஸ்லிம்,மலையக மக்கள் பெரும்பாலும் வாக்களிக்காத நிலையில் அவர் யுத்தத்தை வெற்றிகொண்ட நாயகனாக அடையாளப்படுத்தப்பட்டு மிக மோசமான இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்மூலம் 350 க்கும் மேற்பட்ட அப்பாவைமக்களின் உயிரிகள் குடிக்கப்பட்டே அவருக்கு சிங்களவர்களின் பெருவாரியான வாக்குகள் வேட்டையாடப்பட்டன.சஜித் பிரேமதாசவுக்கு மூவின மக்களும் வாக்களித்தநிலையில் அவர் கௌரவமான தோல்வியை அடைந்தார். அநுரகுமாரவுக்கு சிங்கள இனவாத வாக்குகளும் கிடைக்கவில்லை தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களினதும் வாக்குகளும் கிடைக்கவில்லை. இதனால்தான் அவர் படு தோல்வியடைந்தார்.
இதில் 69 இலட்சத்து 24255 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவான கோத்தபாய ராஜபக்ச பெற்ற வாக்குகள் 52.25 வீதம். 55 இலட்சத்து 64239 வாக்குகளை பெற்ற சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 41.99 வீதம்.4இலட்சத்து 18553 வாக்குளை பெற்ற அநுரகுமார திசாநாயகக பெற்ற வாக்குகள் 3.16 வீதம். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் 1கோடியே 71 இலட்சத்து 40354 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெறவேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது 1கோடியே 71 இலட்சத்து 40354 வாக்காளர்களில் 1 கோடியே 50 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்களேயானால் அதில் 75 இலட்சம் வாக்குகளையாவது பெற வேண்டும். ஆனால் இந்த முறை எந்த வேட்பாளரும் இவ்வளவு தொகை வாக்குகளை பெறமுடியாத நிலை இருப்பதனாலேயே விருப்பு வாக்குகளை பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தினர்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 48இலட்சத்து 87152 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து06366 வாக்குகளைப்பெற்று 1இலட்சத்து 86786 வாக்குகளினாலேயே தோல்வியடைந்தார். அந்த தேர்தலை விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை ஏற்று வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்திருந்தமையே வடக்கு,கிழக்கில் பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைய முக்கிய காரணமானது. அவ்வாறிருந்தும் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் 92344 வாக்குகளையும் மூவினங்களும் வாழும் கிழக்கில் 5இலட்சத்து 88438 வாக்குளையும் பெற்றிருந்தார்.
2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவோ சஜித் பிரேமதாசவோ அநுர குமாரவோ போட்டியிடாத நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து சஜித் பிரேமதாசவும் அநுரகுமாரவும் போட்டியிட்டனர் .இதில் கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சத்து 24255 வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியானார் .சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64239 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க 4இலட்சத்து 18553 வாக்களையுமே பெற்றிருந்தனர். இதில் சஜித் பிரேமதாச வடக்கில் 4இலட்சத்து 87461 வாக்குகளைப்பெற்ற நிலையில் அநுரகுமார 2531 வாக்குளையும் கிழக்கில் சஜித் பிரேமதாச 6 இலட்சத்து 65163 வாக்குகளைப் பெற்ற நிலையில் அநுரகுமார 13494 வாக்குளை மட்டுமே பெற்றிருந்தார்.
ஆக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 15இலட்சத்து 31892 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் சஜித் பிரேமதாச 11இலட்சத்து 52624 வாக்குகளைப் பெற்ற நிலையில் அநுரகுமார 16025 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். 2005 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கவனித்தால் வடக்கு,கிழக்கில் ரணில், சஜித் ஆதரவு நிலையே உள்ளது. இவ்வாறான நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வடக்கில் 8இலட்சத்து 99268 வாக்காளர்களும் ,கிழக்கில் 13 இலட்சத்து 21043வாக்களர்களுமாக 22இலட்சத்து 20311 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.இந்த வாக்குகளில் அதிக மானவற்றை ரணில்,சஜித் ஆகியோர் பங்கிடவுள்ளநிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கும் கணிசமானளவு ஆதரவு உள்ளதால் வடக்கு,கிழக்கில் அநுரகுமாரவின் நிலை பின்தங்கியே உள்ளது
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி மலையகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அநுரகுமாரவுக்கான வாக்கு வங்கி பலவீனமான நிலையில்தான் உள்ளது. அநுரகுமாரவுக்கான வாக்கு வங்கி பலமாகவுள்ள இடங்களில் கூட இம்முறை பொதுஜன பெரமுன வேட்பாளராக ராஜபக்ச வாரிசான நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ளதால் அதிலும் அநுரகுமாரவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆகவேதான் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 50 வீத வாக்குகளைப்பெற்று வெற்றிபெற குறைந்த பட்சம் 70 முதல் 75 இலட்சம் வாக்குகளையாவது பெற வேண்டிய சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சத்து 18553 வாக்குகள் மட்டும் பெற்ற அநுரகுமாரவின் வாக்குகளின் எண்ணிக்கை 17 மடங்குகளால் அதிகரிக்கும், அந்தளவுக்கு அநுரகுமாரவுக்கு ஆதரவான மக்கள் புரட்சி வெடிக்கும் என்பது சாத்தியமற்றது.அத்துடன் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் சஜித்துக்கும் சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் ரணிலுக்கும் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் ரணிலுக்குமே விருப்புவாக்குகளை அளிக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதால் விருப்பு வாக்குகள் விடயத்திலும் அநுரகுமார பலவீனமான நிலையில்தான் இருக்கின்றார்.
அதேவேளை சஜித் பிரேமதாசவுடன் தமிழ்,முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தாலும் அதனை ஒரு பலமாக கருதுமளவுக்கு அந்தக் கூட்டணிக் கட்சிகளிடையில் ஒற்றுமை இல்லாத நிலையுள்ளது. உதாரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ரவூப் ஹக்கீமும் ஒரு சில எம்.பி.க்களும் சஜித்துடன் நிற்கின்றார்கள். ஆனால் அக்கட்சியின் ஏனைய எம்.பி.க்கள் ரணிலுடன் நிற்கின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் சஜித்துடன் நிற்கின்றார் .அவரின் கட்சி எம்.பி.க்கள் ரணிலுடன் நிற்கின்றார்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் சஜித்துடன் நிற்கின்றார் .அவரின் கட்சி எம்.பி. ரணிலுடன் நிற்கின்றார். இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.பி.களான சுமந்திரன் ,சாணக்கியன் சஜித்துடன் நிற்கின்றனர்.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா .சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. ஆகியோர் ரணிலுடன் நிற்கின்றனர். ஸ்ரீதரன் தலைமையிலான ஏனையவர்கள் தமிழ் பொது வேட்பாளருடன் நிற்கின்றனர்.இவ்வாறான நிலையில் சஜித்துக்கு எதிர்பார்க்குமளவுக்கு தமிழ் ,முஸ்லிம் ,மலையக மக்களின் வாக்குகள் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது.
தற்போது ஜனாதிபதியாகவும் ஜனாதிபதி வேட்பாளருமாகவுமிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கிய ,சிங்கள வாக்குகளை வேட்டையாடக்கூடிய பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள்,,எம்.பி.க்கள் என 102 பேர் உள்ளனர். அத்துடன் ஐக்கியதேசியக் கட்சியின் பெருமளவான வாக்குகளும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமன்றி மலையகத்தில் பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவளிப்பதுடன் வடக்கிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கஜன் ராமநாதன் மற்றும் தமிழரசுக்கட்சியின் ஒரு பிரிவினரும் ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர்.
அதேவேளை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் துறைமுகங்கள் அமைச்சு ,வீடமைப்பு அமைச்சு . கிழக்குமாகாண ஆளுநர் பதவி, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பதவி என்பனவற்றைக் கோரி சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில்லை என்ற உத்தரவாதத்தையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதால் கிழக்கு மாகாண தமிழ் மக்களில் பலரும் விரும்பியோ விரும்பாமலோ ரணிலுக்கு ஆதரவளிக்கும் மனோ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க மூவினமக்களின் வாக்குகளையும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே ரணில் விக்கிரமசிங்க ,சஜித் பிரேமதாசவை தோற்கடித்து அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெறுவாரானால் அது உண்மையில் இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாகவே அமைந்திருக்கும். அவ்வாறான ஒரு வெற்றிக்கு ”அரகலய” போன்றதையும் விட வலுவான மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.