சிவா பரமேஸ்வரன்
இலங்கை ஜனாதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
இந்தியாவின் அச்சு மற்றும் இலத்தரணியல் ஊடகங்களை அவதானிக்கும் போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது இலங்கையில் தொடர்ச்சியான சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில். கேந்திர ரீதியாக இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான நாட்டின் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிடுவதில் இந்திய ஊடகங்களிடையே பெரிய ஆர்வம் இல்லை.
”இலங்கை தனது நீண்ட கால நட்பு நாடு” என்றும் இரு நாடுகளுக்கும் இடையே அறிவுசார் ரீதியாகவும், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியாகவும் தொடர்பாடல்கள் இருக்கிறது, அந்த உறவுகள் 2500 ஆண்டுகள் பழமையானது என்று இந்தியா கூறிக்கொள்கிறது.
ஆனால், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் அரசியல் சாசன திருத்தத்திற்கு வழிவகுத்த ”இந்தியாவின் மிகப்பெரிய இராதந்திர தோல்வி” கருதப்படுகின்ற இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டு 37 ஆண்டுகளுக்கு பிறகு இன்றளவும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இலங்கை ஜனாதிபதிகளை தனது குழந்தையான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த வைக்க முடியவில்லை.
எனினும், இப்போது மேலும் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, இந்தியா தனது அண்டை நாடான இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்து செயல்படும் என்பது தான் யதார்த்தம்.
இலங்கை நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலானது இந்தியாவின் பார்வையிலிருந்து அண்மைக்காலத்தில் தனித்துவமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாட்டில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் வேட்பாளர்கள் இம்முறை சுயேட்சையாக போட்டியிடும் இரு தமிழ் வேட்பாளர்கள், தமது வெற்றியைவிட ஒருமைப்பட்டை வலியுறுத்தவே போட்டியிருகிறார்கள்.
நாட்டின் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து பொது தமிழ் வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிருகிறார். அதே போன்று மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் வாக்குகளை இலக்குவைத்து மயில்வாகனம் திலகராஜ் களத்தில் உள்ளார். இந்த விடயம் குறிப்பாக இந்திய ஊடகங்களின் பார்வையை ஈர்த்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த ஆர்வமோ, பார்வையோ இந்திய ஊடகங்களில் இல்லை. இலங்கையில் நிலவும் ஆழமான அரசியல் நீரோட்டங்கள் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால் அந்த இரு சமூகங்களும் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவை என்பதை அவர் கருத மறந்துவிட்டன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த செய்திகள் இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது வெளிவருகின்றன, ஆனாலும் இந்திய வாசகர் அல்லது பார்வையாளர் மத்தியில் அந்த தேர்தல், அதன் நுணுக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்த அவை தவறிவிட்டன.
நிறைவேற்று அதிகார முறைமை என்றால் என்ன, அது எப்படி செயல்படும், அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்திய ஊடகங்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அது மட்டுமின்றி இந்தியத் தேர்தல்கள் போன்று இலங்கை தேர்தலில் வாக்களிப்பு என்பது எளிமையானது அல்ல என்பதையும், இரண்டாவது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் வழிமுறை இலங்கையில் உள்ளது என்பதையும் இந்திய ஊடகங்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இந்திய ஊடகங்கள் மற்றுமல்ல, ஆய்வு நிறுவனங்களும், சுயாதீனமாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமல் இந்த தேர்தல் குறித்து இலங்கை ஊடகங்களில் வந்த செய்திகளின் தொக்குப்பையே வெளியிட்டன. எந்தளவிற்கு அவர்களுக்கு புரிதல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காட்டலாம்.
டில்லியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவானது என்று கருதப்படும் விவேகானந்தா ஆய்வு மையம், இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் நாமல் ராஜபக்சவின் படத்திற்கு பதிலாக சாமல் ராஜபக்சவின் படத்தை பதிவிட்டுள்ளனர்.
இதே போன்று பொதுமக்கள் மத்தியிலும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த ஆர்வம் மிகவும் குறைவாகவே உள்ளது. இலங்கையுடன் கலாச்சார, நிலவியல், மதம் மற்றும் மொழி ரீதியாக மிகவும் நெருக்கமாகவுள்ள தமிழ்நாட்டில் கூட இத்தேர்தல் தொடர்பான செய்திகள் மிகவும் குறைவாகவே உள்ளதை காண முடிகிறது. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது செய்தி வெளியிட்டாலும், அதுவும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வெற்றி ஈட்டுவாரா இல்லையா என்பதையே மையப்படுத்த்ஃபியுள்ளன.
எனினும் முன்னணி தமிழ் தினசரிகளில் ஒன்றான ‘தினமலர். பொது தமிழ் வேட்பாளர் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டது. அதுவும் அந்த வேட்பாளரை ஆதரிப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்முரண்பாடுகள் பற்றியே இருந்தது.
“பொது தமிழ் வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டுள்ளார், ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார். இது தமிழ் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்”.
இந்தியாவின் தேசிய ஒலிபரப்பாளரான தூர்தர்ஷனும் (இலங்கையில் ரூபவாஹினி போன்று), டில்லியை தளமாக கொண்டுள்ள ஊடகங்களும் அவ்வப்போது இந்த தேர்தல் குறித்த செய்திகளை வெளியிட்டாலும், தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகள், அபிலாஷைகள், கருத்துக்கள் மற்றும் தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு, இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து அவர்களின் செய்தி கவனம் செலுத்தவில்லை.
அவர்களின் செய்தி நிலைப்பாடு என்பது அடிப்படையில் யார் முக்கிய வேட்பாளர்கள் என்றும் அவர்களின் பின்னணி, நாட்டின் பொருளாதரப் பிரச்சனை, புதிய அதிபர் இந்தியாவுடன் எப்படியான உறவுகளை பேணுவார் என்று தான் மையப்படுத்தியிருந்ததே தவிர, இந்தியாவிற்கு தொடர்புடைய பிரச்சனைகளில் வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பதில் தோல்வியடைந்துள்ளன.
ஒப்பீட்டளவில் சென்னையிலிருந்து இயங்கும் ‘ தி இந்து’ தினசரி இந்த தேர்தல் குறித்து கூடுதல் செய்திகளை வெளியிட்டன. அதற்கு முக்கிய காரணம் என்பது கொழும்பில் அவர்களுக்கு முழுநேர செய்தியாளர் ஒருவர் இருப்பதே. அவர்கள் அனுரகுமார திஸநாயக்கவுடன் ஒரு பேட்டியை வெளியிட்டனர். அதில் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரச படையினர் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியிருந்தார். அதேவேளை அதற்கு மறுமொழியாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் அந்தில் இல்லை. அது மட்டுமில்லாமல், தமிழ் நாட்டிலேயே அவர்களுக்கு அதிகளவிலான வாசகர்கள் இருந்தாலும், அரியநேத்திரன் அல்லது திலகராஜுடன் அவர்கள் சிறப்பு செவ்வி எதையும் எடுத்து வெளியிடவில்லை. இவ்வளவிற்கும் ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் ஆகிய இரு மொழிகளில் சென்னையிலிருந்து வெளிவருகிறது.
அதேவேளை இந்தியாவின் முன்னாணி ஆங்கில இணைய ஊடகங்களில் ஒன்றான ‘ஃபர்ஸ்ட்போஸ்ட்’ இணைய பக்கத்தில் சிறப்பு கட்டுரை ஒன்றை ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் அசோக் மேத்தா எழுதியுள்ளார். இவர் இலங்கை விடயங்களை நெருக்கமாக அவதானித்து வருபவர் என்று அறியப்படுபவர்.
“பாக்கு நீரணையில் இரு பக்கமும் தமிழ் அரசியல் பாரிய மாற்றங்களை கண்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் களத்திலிருந்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை என்ற விடயம் மறைந்து போய்விட்டது”.
“இந்தியா தனது இராஜதந்திர அணுகுமுறையின் ஒரு அங்கமாக, அபூர்வமான வகையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் அனுரவை டில்லிக்கு அழைத்தது. அப்படியான முன்னெடுப்பை மாலத்தீவுகள் மற்றும் வங்க தேசத்தில் இந்தியா செய்யவில்லை. யதார்த்தமாக இந்தியாவின் முதல் தெரிவு ரணில் விகரமசிங்க, அடுத்து சஜித் பிரேமதாஸ பிறகு அனுரகுமார திஸநாயக்க என்ற வரிசையிலேயே இருக்கும்” என்று எழுதியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி இந்தி மொழி நாளிதழனான ’தைனிக் ஜாக்ரன்’ நான்கு முன்னணி வேட்பாளர்கள் குறித்த ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.
“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான போட்டியை எதிர்கொள்கிறார். எனினும் அவர் இன்னும் இடைவெளியைக் குறைத்து இரண்டாவது விருப்பு வாக்கு மூலம் தேர்தலில் வெற்றிபெற முடியும். மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் மற்றைய பிரதான போட்டியாளராக இருந்தாலும், இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்களின் கருத்துப்படி அவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு இல்லை. அரசியல் ஊசலாட்டம் எப்பக்கமும் சாயலாம்”.
தேர்தலுக்கு இரண்டு கிழமைகளே இருந்த நிலையில், மற்றொரு முன்னணி இந்தி மொழி நாளிதழான தைனிக் பாஸ்கர், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை காட்டிலும், எதிர்கால இலங்கை-இந்திய உறவுகள் குறித்தே பேசியது. வேட்பாளர்ம், பிரச்சனைகள், எதிர்வுகூறல்கள் ஆகியவை எல்லாம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
டில்லியிலிருந்து செயல்படும் பிபிசியின் தமிழ் மொழி சேவையின் இணையம் கூட இந்த தேர்தல் குறித்து போதியளவில் செய்திகளை வெளியிடவில்லை. இவ்வளவிற்கும் அவர் பல தசாபதங்களாக ‘இலங்கையே எமது ரொட்டியும் வெண்ணெயும்” என்று கூறி வந்தார்கள். ஆனால் போர் முடிவடைந்த பிறகு இலங்கை மீதான அவர்களது கவனம் மிகக் குறைவாக உள்ளது என்பதற்கு அப்பாற்பட்டு அது காத்திரமில்லாமலும் உள்ளது.
இதேவேளை கொழும்பில் இந்திய தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரசன்னமும் மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே உள்ளது. முன்னர் 1985-2005 காலகட்டத்தில் அங்கு வலுவான செய்தி சேகரிப்பு கட்டமைப்பும் அவர்களுக்கு இருந்தது. அகில இந்திய வானொலியில் கொழும்புச் செய்தியாளராக நீண்டகாலம் இருந்த பா. கண்ணன் இலங்கை விடயங்களில் வலுவான ஆளுமையாக இருந்தார்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய தினசரியாக கருதப்படும் ‘தினமலர்’ தவிர, தேசியளவில் செயல்படும் ஆங்கில, இந்தி ஊடகங்கள் பொது தமிழ் வேட்பாளரை முற்றாக புறக்கணித்துள்ளதை காண முடிகிறது. இது அவர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் அல்லது போர் பாதித்த பிரதேசங்களில் நிலவும் அரசியல் செயல்பாடுகள் குறித்த புரிதலின்மையாகவும் இருக்கலாம்.
ஆச்சரியப்படும் வகையில் சஜித் பிரேமதாஸ அல்லது அனுரகுமார திஸநாயக்கவை விட இந்திய ஊடகங்கள் நாமல் ராஜபக்ச மீது கூடுதல் ஆர்வம் கொண்டுள்ளதை காண முடிகிறது. அவர்களுக்கு இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்த ஆழ்ந்த புரிதல் இல்லை என்பதையே இது காட்டுவதாகப் பார்க்கப்பட வேண்டும்.
இந்திய ஊடகங்களின் பொதுவான கவனம் என்பது ரணில் வெற்றுவாகை சூடுவாரா என்பது குறித்தும் மஹிந்த ராஜபக்ச நாமலை களமிறக்கியுள்ளதையும் சுற்றியுமே உள்ளது. தெற்காசிய நாடுகளில் நிலவும் குடும்ப அரசியலில் பிரதிபலிப்பாகவும் இது இருக்கலாம்.
பெரும்பாலான இந்திய ஊடகங்கள் அனுரவை இடதுசாரி, மார்க்ஸிய-லெனினிய வேட்பாளராக குறிப்பிட்டும் அவரது ஜெ வி பி பின்புலத்தையும் பார்க்கின்றன.
முன்னாணி இந்திய தேசிய ஊடகங்களை பார்க்கும் போது ஒப்பீட்டளவில் ரணில் மற்றும் அனுரவைவிட சஜித் குறித்து குறைவாகவே கவனம் செலுத்தியுள்ளன. அவர்கள் கொழும்பிலிருந்து ஏ எவ் பி, ராய்டர்ஸ் போன்ற பன்னாட்டுச் செய்தி முகமைகளின் கட்டுரைகளையே வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு முறை எப்படியானது, ஒருவர் வெற்றிபெற பதிவான வாக்குகளில் 50%+1 வாக்கு தேவை என்ற செய்தியை இந்திய மக்களுக்கு தெரிவிக்க முயலவில்லை.
இந்திய-இலங்கை கிரிக்கெட் போட்டிகள் மீது இந்திய ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும் போது, கேந்திர ரீதியாக இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒரு நாடான இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் தொடர்பில் அவை பாராமுகமாகவே உள்ளன. இல்லையென்றால் பின்பாட்டு பாடுபவர் போல் ஏதோ நாமும் எழுதிவைப்போம் என்பது போன்று தான் நடந்துகொள்கின்றன.
எப்படி ஒரு காலத்தில் இலங்கை தேயிலை இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒரு தனி இடத்தைப் பெற்று பிறகு அதை இழந்ததோ, அதே போன்று தான் இலங்கை அரசியல் விடயங்களை இந்திய ஊடகங்கள் முன்னர் பார்த்தது போன்று அதே ஆர்வம் மற்றும் அக்கறையுடன் பார்ப்பதில்லை என்பது தான் உண்மை.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்: அதனால் நமக்கென்ன என்ற மனோபாவமே இந்திய ஊடகங்களிடம் மேலோங்கி உள்ளதாக கருத வேண்டியுள்ளது.