பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான, காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் 8 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து, உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரமும் கிடைத்தது. இதையடுத்து சிறுவனின் புகாரின்பேரில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை காவல்துறை தேடி வருகின்றனர். இதற்கிடையே மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கும் காணொளியும், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவகம் ஒன்றிற்கு சென்ற போது, மதுபோதையில் இருந்த சிறுவர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து, மனோவின் மனைவி ஜமீலா பாபுவும் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தினை தெரிவித்தார். தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த புகாரின்பேரில் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் அடிதடி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.