மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
நடிகை கவியூர் பொன்னம்மா 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார். மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவியூர் பொன்னம்மா மறைவுக்க நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லா நடிகர்களுக்கும் ‘அம்மா’ என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம். தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது. ‘அம்மா’ கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.