இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களை வாழ்த்தும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம்
“இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் காலத்திற்கு காலம் அமர்ந்திருந்தவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதற்காக இனவாதத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அகங்காரத்தோடு நடந்து கொண்ட சகாப்தத்தை இல்லாதொழித்து தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகிய தங்களை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது. தங்கள் நீண்ட கால கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் தற்போதைய மாற்றத்தை நாம் கணிக்கின்றோம். எனவே, தங்கள் தோழர்களாகிய ஏனைய அரசியல் சகாக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவோடு இனப்பாகுபாடு அற்ற ஒரு இணக்கமான இலங்கைக்குள் அனைத்து மக்களுக்குமாகவும். தமிழ் மக்களின் இதயங்களிலும் நிம்மதி தோன்றவும் வறுமை நீங்கவும் வழி செய்யுங்கள்.
அதே போன்று ஒரே நாளில் தமிழ் சிங்கள புத்தாண்டை இரு இன மக்களும்கொண்டாடுகின்ற ஒரு அற்புதமான தேசத்தை தங்களிடம் ஒப்படைத்த. தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களின் எதிர்காலம் பொற்காலமாக விளங்க தீர்க்கமான முடிவுகளை எடுக்க. எந்த நேரத்திலும் தயங்காதீர்கள்”
இவ்வாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களை வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ்ப் பணியும் தமிழ்ப் பண்பாடு தொடர்பான செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உலகின் பல நாடுகளிலும் மாநாடுகளை நடத்தியும் தமிழ் மொழியை புலம்பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சியை சென்னை எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்தில் அதில் தகுந்த பயனைப் பெற்றுக் கொடுத்த ஒரு உலக அமைப்பாக விளங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் அவர்களின் இந்த வாழ்த்துச் செய்தி உலகத் தமிழர்களுக்கு உற்சாகத்தைத் தரவல்லது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி வாழ்த்துச் செய்தியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்:
இயற்கை வளங்கள் நிறைந்த எழில் மிகுந்த இலங்கையில் தேவையற்ற வகையில் இனப்பாகுபாட்டை ஒரு ஆயுதமாக முன்னைய அரசியல் தலைவர்கள் எடுத்துக் கொண்டதன் விளைவே இங்கு பல முரண்பாடு தோன்றி இறுதியில் தங்கள் அமைப்பினரைப் போன்று எமது தமிழ் இளைஞர்களும் தீவிரப் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள். மாங்கனியைப் போன்ற ஒரு சிறிய தேசத்தின் அழகும் அமைதியும் கடந்த காலங்களில் சிதைந்து போயிருந்தது. இனிமேலும் இனங்களுக்கு எதிரான அடக்கு முறை அல்லது இனப்பாடுபாடு ஆகியவை இந்த தேசத்தில் தலைவிரித்து ஆடினால் அது எவ்வித நன்மைகளையும் தரப்போவது இல்லை. தங்களை தேர்ந்தெடுத்த மூவின மக்களும் அதையே எதிர்பார்க்கின்றார்கள்.
தங்களுக்கு முன்னாள் உள்ள பணிகளும் கடமைகளும் எவ்வளவு சவால்கள் நிறைந்தன என்பதை நாம் அறிவோம். யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் அறிவையும் சகிப்புத் தன்மையும் கொண்ட அதிகளவு மக்கள் தங்களை தேர்ந்தெடுத்த காரணமே, இந்த தேசத்தில் பொதுவான ஒரு மாற்றம் தேவை என்பது தான்.
எனவே தங்கள் ஆட்சிக் காலத்திலும், அதனைத் தொடர்ந்து வரும் எதிர்காலத்திலும் இலங்கையில் எவ்வித சந்தேகங்களோ அன்றி முரண்பாடுகளோ இல்லாது தங்களால் முடிந்தளவிற்கு மாற்றங்களைக் கொண்டு வந்து அனைத்து மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் நாட்களுக்காக நாம் காத்திருப்போம்.
இதேவேளையில், தமிழ்ப் பண்பாட்டை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட சர்வதேச அமைப்பு என்ற வகையில் இலங்கையில் அனைத்து மொழிகள் மற்றும் மதங்கள் சார்ந்த செயற்பாடுகளில் சீரான போக்கு கொண்ட திட்டங்களை தாங்கள் கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.