இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு, கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்ட கட்சி, இரண்டு தடவைகள் மிகக்கொடூரமாக நசுக்கப்பட்ட ஒரு கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் காலிமுகத்துடலில் இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கட்சி இப்பொழுது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியாக எழுச்சி பெற்றிருக்கிறது.
இது ஒரு அபூர்வமான தலைகீழ் மாற்றம். எந்தப் படைக்கட்டமைப்பு அந்த இயக்கத்தை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததோ,எந்தப் படைக்கட்டமைப்பு அதன் போராளிகளை தெருக்களில் கைகளை பின்புறம் கட்டிய பின் டயர்களோடு போட்டு கொளுத்தியதோ,எந்தப் படைக்கட்டமைப்பு அதன் போராளிகளை சுட்டுக்கொன்று ஆறுகளில் வீசியதோ, அதே படைக்கட்டமைப்பு அந்த இயக்கத்தின் தலைவரும் புதிய ஜனாதிபதியுமாகிய அனுர குமாரவின் முன் ராணுவ வணக்கம் செலுத்துகின்றது.
அனுர குமாரவின் வெற்றி என்பது தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களில் வெற்றிதான். அந்தப் போராட்டங்களை அனுர குமாரவின் கட்சி மட்டும் முன்னெடுக்கவில்லை. அதை முன்னெடுத்த பல அமைப்புகளில் ஜேவிபியின் பங்களிப்பும் இருந்தது. ஜெவிபியில் இருந்து பிரிந்து சென்ற அமைப்புகள்தான் அரகலயவின் மூளையாகவும் பலமாகவும் இருந்தன. அந்த அமைப்புக்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தி இம்முறை தேர்தலில் போட்டியிட்டன. அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 11 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்தன. அதாவது உண்மையான அரகலய போராளிகளுக்கு சிங்கள மக்கள் வெற்றியைக் கொடுக்கவில்லை. மாறாக இந்தப் போராட்டத்தில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு பங்களிப்புச் செய்த ஜேவிபிக்கு அந்த போராட்டத்தின் கனிகளை கொடுத்திருக்கிறார்கள். அரகலய போராட்டக்காரர்கள் காலிமுகத் திடலில் இரவு பகலாகக் குந்தியிருந்து போராடியதன் விளைவுகளை முதலில் ரணில் விக்ரமசிங்க அனுபவித்தார். இப்பொழுது அனுரகுமார அனுபவிக்கின்றார். போராடியது யாரோ, வெற்றி பெற்றது யாரோ. சிங்கள மக்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றார்களா?
2019 ஆம் ஆண்டு ஒரு இரும்பு மனிதன் தேவை என்று ராஜபக்சவை அவர்கள் பதவிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் 21 மாதங்களில் அந்த இரும்பு மனிதன் வேண்டாம் என்று தெருவில் இறங்கிப் போராடினார்கள். அந்த இரும்பு மனிதனின் குடும்பத்தை நாட்டைவிட்டு ஓடச்செய்த அரகலய போராட்டக்காரர்கள் இப்பொழுது தேர்தலில் நின்றார்கள்.ஆனால் சிங்கள மக்கள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஜேவிபிக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஜேவிபி சிஸ்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறது. ஆனால் அவர்களும் அந்த சிஸ்டத்தின் ஒரு பகுதி தான். அவர்கள் சிஸ்டத்தை மாற்றுவோம் என்று கூறும் பொழுது வெளிப்படையாகத் தொனிப்பது ஊழலற்ற அரசியல், ஊழலற்ற நிர்வாகம் என்பதுதான். ஊழல் அரசியல்வாதிகளிடம் மட்டும் இல்லை. அதிகாரிகள் மட்டத்திலும் உண்டு. நிர்வாகக் கட்டமைப்பே ஊழல் மிகுந்ததாகதான் மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல அதைவிட முக்கியமாக சாதாரண மக்களும் ஊழல் மிகுந்த வாழ்க்கையை ஒரு பண்பாடாக வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஊழல் ஒரு வாழ்க்கை முறையாக மாறிய நாடு இலங்கைத்தீவு. இந்நிலையில் சிஸ்டத்தை மாற்றுவதாகக் கூறி ஊழலை முழுமையாக ஒழிக்க அனுரகுமாரவால் முடியுமா ?
முடியாது என்பதைத்தான் அவருடைய பதவியேற்பு வைபவக் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. அவர் பதவி ஏற்ற பொழுது மகாநாயக்கர்களின் முன் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். அங்கே அவர் ஒரு இடது சரியாக இருக்கவில்லை. ஆனால் அவருடைய கட்சி இடது மரபிலிருந்துதான் பிறந்தது. இப்பொழுது பிக்குகளின் முன் மண்டியிட்டு பதவியேற்கின்றது. அதாவது சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளுக்குள் தன்னை தகவமைத்துக் கொள்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? பிறகு என்ன மாற்றம்?
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அனுர நம்பிக்கையூட்டும் எந்த ஒரு வாக்குறுதியையும் வழங்கவில்லை. இனப் பிரச்சினையை அவர் மனிதாபிமானப் பிரச்சினையாகத் தான் விளங்கிக் கொண்டார். அதை அதன் அரசியல் அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது.எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை.
அவருடைய பிரதமர் நம்பிக்கையூட்டும் ஒரு புத்திஜீவி. ஆனால் இதற்கு முன்னரும் சிங்கள பௌத்த அரசியலில் அவரை போல பல புத்திஜீவிகள் வந்திருக்கிறார்கள். அனைவருமே ஒரு கட்டத்தில் சிங்கள பௌத்த சிந்தனையின் கைதிகளாகத்தான் மாறினார்கள். இந்த விடயத்தில் லிபரல் ஜனநாயக வாதிகள் மட்டுமல்ல,கொல்வின் ஆர்.டி. சில்வா,என். எம் பெரேரா போன்ற இடது மரபில் வந்தவர்களும் அடங்குவர்.
இம்முறை தேர்தலில் இனவாதம் மேலோங்கியிருக்கவில்லை என்று சுமந்திரனைப் போன்றவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இனவாதம் பேசப்படவில்லை என்பதனால் இனவாதம் நாட்டில் இல்லை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று அரகலய போராட்டத்தின் தமிழ் உறுப்பினர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். அது சரியானது. நாட்டில் இனவாதம் பின்வாங்கி விட்டது அல்லது படுத்து விட்டது என்று ஒரு பகுதி தமிழர்கள் இப்பொழுது உற்சாகமாக எழுதி வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லாதவிடத்து இனவாதம் தன்னை விகாரமாக வெளிப்படுத்தாது என்பதுதான் கடந்த 15 ஆண்டு கால நடைமுறை ஆகும். ஆனால் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை முன்னுறுத்தியதும் அது இனவாதம் என்று ஒரு பகுதித் தமிழர்களே கத்தத் தொடங்கி விட்டார்கள். சிங்கள பௌத்த அரசியலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று கூறுபவர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும்.
இது ஜனாதிபதி தேர்தல் காலம் மட்டும் அல்ல ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் காலமும் கூட. இலங்கையில் நடந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. இப்பொறிமுறையின் எதிர்காலம் குறித்து இம்முறை கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும். இப்பொறி முறையை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீடிப்பதா அல்லது இரு ஆண்டுகளுக்கு நீடிப்பதா? அல்லது இப்பொறிமுறையை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு புதிய தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றுவதா? ஆகிய விடயங்களைக் குறித்து இம்முறை ஐநா கூட்டத்தொடரில் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவின் ஐநாவுக்கான தூதுவர் ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய பரிந்துரைகளை நிராகரித்து விட்டார். ஆனால் சஜித்தும் அனுரவும் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. இன்றுவரை கூறவில்லை. பொறுப்புக் கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பதில் என்ன?
அனுரகுமார ஒரு ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.. பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணையைத்தான் கேட்கின்றார்கள். தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை என்று. அதாவது ஜேவிபி பொறுப்புக் கூறத் தயார் இல்லை என்று பொருள்.
பொறுப்புக்கூறல் என்பது இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கு குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது. அவ்வாறு இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறத் தயாரில்லாத ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு தீர்வைத் தரும்?
பொறுப்புக் கூறத் தயாரில்லை என்பதே இனவாதம்தான். எனவே இனவாதம் படுத்துவிட்டது,பின் வாங்கி விட்டது என்று கூறும் தமிழர்கள் யாருக்கோ சேவகம் செய்கிறார்கள் என்று தான் பொருள். அல்லது அவர்களுடைய மூளை மழுங்கிவிட்டது என்று பொருள்.
தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடங்குகின்றது. தமிழ் மக்களை ஒரு தேசமாக, தேசிய இனமாக ஜேவிபி ஏற்றுக்கொள்கிறதா? அவர்களுக்கு சுய நிர்ணய உரிமையும் இறைமையும் உண்டு என்பதனை அக்கட்சியை ஏற்றுக் கொள்கிறதா? அங்கிருந்து தீர்வைத் தேடத் தயாரா ? அங்கிருந்து மாற்றத்தைத் தொடங்க தயாரா?