எமது கோரிக்கையை ஏற்றே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வடக்கு,கிழக்கில் வெற்றிபெற வைத்துள்ளனர்.அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என சுமந்திரன் கூறும் நிலையில் அவரின் சொந்த தேர்தல் தொகுதியான உடுப்பிட்டி தொகுதி மக்கள் மட்டுமல்ல பருத்தித்துறை தொகுதியையும் சேர்த்த வடமராட்சி மக்களே சுமந்திரனை ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்குத்தான் வாக்களித்துள்ளனர். அதேவேளை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் 4,87,461 வாக்குகள் பெற்ற சஜித், சுமந்திரன் ஆதரவளித்த நிலையில் 2,16,599 வாக்குகளை மட்டும் பெற்றது வெற்றியா ? வடக்கில் சஜித் பெற்ற வாக்குகள் 2,16,599. ஆனால் தேர்தலை புறக்கணித்தோர் எண்ணிக்கை 2,75,577.அவ்வாறானால் வடக்கில் தேர்தலை புறக்கணிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கை வெற்றி பெற்றுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரிமை கோர முடியும் தானே?
கே.பாலா
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் குழு சஜித் பிரேமதாசவின் பக்கமும் ஸ்ரீதரன் அணி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பக்கமும் நின்ற நிலையில் தமிழ் பொதுவேட்பாளரை தோற்கடித்தே தீருவேன் என சபதமிட்ட சுமந்திரன் அணி சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு அவரின் மேடையேறி பிரசாரத்தில் ஈடுபட்டது. மறுபுறம் தமிழ் தேசியத்தை வெற்றிபெற வைப்போம் என முழக்கமிட்டு ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வீதி வீதியாக,வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டன.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சுமந்திரன் குழு ஆதரவளித்த சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்ரீதரன் அணியும் தமிழ் தேசியக்கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவளித்த தமிழ் பொது வேட்பாளர் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில்தான் ‘வறட்டுக் கௌரவ”அரசியல்வாதியான சுமந்திரன் தலைமையிலான குழு வடக்கில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளை மேலோட்டமாக வைத்துக்கொண்டு ”நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.அதனால்தான் சஜித் பிரேமதாசாவுக்கு வடக்கு,கிழக்கில் வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.ஆகவே தமிழ் மக்கள் எங்கள் பக்கம்தான் நிற்கின்றார்கள்”என்ற கருத்துக்களை வெளியிட்டு விழுந்தும் மீசையில் மண் படவில்லை (சுமந்திரனுக்கு அது இல்லை என்பது வேறு கதை) என்றவாறாக கதை அளந்து வருகின்றனர்
எனவே சுமந்திரன் குழுவின் இந்த தமிழ் மக்கள் எங்கள் பக்கம் என்ற ”கதையளப்பு”பற்றி கொஞ்சம் புள்ளி விபரங்களுடன் ஆராய்வோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றார். அவர் யாழ் மாவட்டத்தில் 3,12,722 வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் 1,74,739 வாக்குளையும் பெற்று வடக்கு மாகாணத்தில் அவர் மொத்தமாக 4,87,461 வாக்குகளை தனதாக்கிக் கொண்டார்.அப்போது அவருக்கு ஆதரவளிக்குமாறு சுமந்திரன் குழு மேடையேறி பிரசாரம் செய்யவில்லை. தமிழ் மக்கள் தாமாகவே சஜித்துக்கு வாக்களித்தார்கள்.
ஆனால் இம்முறை தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புக்களின் முயற்சியால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் அவரை தோற்கடிப்பேன் என சூளுரைத்த சுமந்திரனும் அவரது குழுவும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஒரு சர்வாதிகாரத்தன முடிவை கட்சிக்குள் எடுத்து அதனை ஏகமானதான முடிவாக அறிவித்து சஜித்துக்கு ஆதரவாக மேடையேறி பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாச யாழ் மாவட்டத்தில் 1,21,177 வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் 95,422 வாக்குகளையும் பெற்று வடக்கு மாகாணத்தில் 2,16,599 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார் .இது கடந்த 2019 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச பெற்ற 4,87,461வாக்குகளை விட 2,70,862 வாக்குகள் குறைவானதாகும். இவ்வாறான நிலையில் தாம் விடுத்த வேண்டுகோளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என சுமந்திரன் எப்படி கூற முடியும்?
எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களி லும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார்.வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 வீதத்தினர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது எமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும்அங்கீகாரம் என்றதொரு கதையளப்பையும் சுமந்திரன் எம்.பி. வெளியிட்டுள்ளார் .
அவ்வாறானால் அடையாளம் கண்ட 3 வேட்பாளர்களில் ஏன் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டும் கூறி ஆதரவு என அறிவிக்க வேண்டும்?அல்லது அவரின் பிரசார மேடையில் மட்டும் ஏன் ஏறி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்? தமிழ் மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம் என்ற அறிவிப்பை கௌரவமாக விடுத்திருக்கலாம் .அப்படி விடுத்திருந்தால் இன்று வடக்கு.கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்,சிங்கள வாக்காளர்கள் சஜித்துக்கு அளித்த வாக்குகளையும் தாங்கள் கூறித்தான் போட்டார்கள் என்று கூற வேண்டிய ஒரு ”கோமாளித்தன ”நிலை சுமந்திரன் குழுவுக்கு ஏற்பட்டிருக்காது.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் 2.67 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69 வீத வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது என்றும் ஒரு உதாரணத்தை சுமந்திரன் கூறியுள்ளார். 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே .ஆர் .ஜெயவர்த்தன எடுத்த வாக்குகள் 34,50,811.இது அப்போதைய சதவீதப் படி 52.91. குமார் பொன்னம்பலம் எடுத்த வாக்குகள் 173,934.இது அப்போதைய சதவீதப் படி 2.67.ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க பெற்ற வாக்குகள் 56,34,915.இது இப்போதைய சதவீதப் படி 42.31.தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் 2,26,343.இது இப்போதைய சதவீதப் படி 1.7.
1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித்தேர்தலில் குமார் பொன்னம்பலம் எடுத்த வாக்குகள் 1,73,934.தற்போது நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் 2,26,343.இதை தெரிந்துகொண்டே குமார் பொன்னம்பலம் எடுத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கூறாது வீதத்தை மட்டும் கூறி தமிழ் பொது வேட்பாளரை மட்டம் தட்டுவது மட்டுமே சுமந்திரனின் ஒரே நோக்கம் .
அப்போதிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81,45,015.அதில் வாக்களித்தோரின் எண்ணிக்கை 6,602,617.இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 6,522,147. இதில்தான் 173,934 வாக்குகளைப் பெற்று 2.67சதவீதத்தை குமார் பொன்னம்பலம் பெற்றுக்கொண்டார் .தற்போது நடந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354.அதில் வாக்களித்தோரின் எண்ணிக்கை 13,619,916,இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 13,319,616.இதில்தான் 226,343வாக்குகளைப் பெற்று 1.7%சதவீதத்தை அரியநேத்திரன் பெற்றுக்கொண்டார். தற்போதை வாக்களித்தோர் எண்ணிக்கையுடன் குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் குமார் பொன்னம்பலம் 1 சதவீதம் வாக்குகளைக்கூட பெற்றிருக்க முடியா து. இது சுமந்திரனுக்கு நன்கு தெரிந்தும் அதனை ஏற்றுக்கொள்ள அவரின் தலைக்கனம் இடம்கொடுக்கவில்லை. அதாவது தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்த ஆதரவை சுமந்திரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமன்றி 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது தன்னைப்போன்ற ”தமிழ் தேசிய விரோதிகள்” இருக்கவில்லை,தன்னைப்போன்று குமார் பொன்னம்பலத்துக்கு எதிராக யாரும் விஷம பிரசாரங்கள் செய்யவில்லை,காலைப்பிடித்து இழுக்கவில்லை என்பது சுமந்திரனுக்கு தெரியாதிருக்க நியாயமில்லை.
எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமி ழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார் என்கின்றார் சுமந்திரன் . யாழ் மாவட்டத்தில் 4489 வாக்குகள் வித்தியாசத்திலேயே சஜித் முன்னிலையில் உள்ளார் .வடக்கு மாகாணத்தில் யாழ் ,வன்னி என்ற இரு தேர்தல் மாவட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,திகாமடுல்ல (அம்பாறை) ,திருகோணமலை என்ற தேர்தல் மாவட்டங்களும் உள்ளன. இதில் வடக்கில் இரு தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார். அதில் யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களும் வன்னிமாவட்டத்தில் முஸ்லிம்,சிங்கள வாக்களர்களும் உள்ளநிலையில் அவர்களின் வாக்குகளையும் சுமந்திரன் உரிமைகோருகின்றார்.
அதேபோன்றே கிழக்கு மாகாணத்தில் சிங்கள முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை பெருவாரியாக இருக்கும் நிலையில் அதற்கும் சுமந்திரன் உரிமை கோருகின்றார் . அதாவது கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த பெரும்பான்மையினராக முஸ்லிம்களும் உள்ளனர் .அதேபோன்று அதற்குள் வரும் சம்மாந்துறை கல்முனை ,பொத்துவில் தேர்தல் தொகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளனர்.இதேபோன்றே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாகவும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்திலும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றமை தமது கோரிக்கையை ஏற்று மக்கள் வாக்களித்ததாலேயே என சுமந்திரன் குழு கூறுவது மிகபெரும் நகைச்சுவை .
வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 வீதத்தினர் நாம் அடையாளம் கண்ட 3 பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது எமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் என்று கூறும் சுமந்திரன் எம்.பி.யின் சொந்த தொகுதியான உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே சுமந்திரன் எம்.பி. தமிழ் பொது வேட்பாளரை தோற்கடித்தரா ?சுமந்திரன் எம்.பி. ஆதரவளித்த சஜித் வெற்றி பெற்றாரா என்பதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
சுமந்திரன் எம்.பி.யின்சொந்த தொகுதியான உடுப்பிட்டியில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 5,996.தமிழ் பொதுவேட்பாளரான அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் 8,467,ரணில் விக்கிரமசிங்க கூட இந்த தொகுதியில் 5,259 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆக சுமந்திரனின் சொந்த தொகுதி மக்களே அவரின் பேச்சைக்கேட்காத நிலையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தனது பேச்சைக் கேட்டுள்ளனர் என சுமந்திரன் கூறுவதனை என்னவென்று சொல்வது?
சரி சுமந்திரனின் தொகுதியான உடுப்பிட்டி தொகுதி மக்கள் தான் சுமந்திரனை ஒரு பொருட்டாகக் கூடப் பார்க்கவில்லை என்று பார்த்தால் அவரின் பூர்வீக இடமான வடமராட்சியின் இன்னொரு தொகுதியான பருத்தித்துறை தொகுதி மக்களும் சுமந்திரனை நிராகரித்து விட்டனர் .பருத்தித்துறை தொகுதியில் சுமந்திரன் ஆதரவளித்த சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 6,100.சுமந்திரன் தோற்கடிப்பேன் என சூளுரைத்த அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் 8,658.
வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 வீதத்தினர் நாம் அடையாளம் கண்ட 3 பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது எமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் என் சுமந்திரன் கூறுவது உண்மையானால் இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்த தேர்தலை புறக்கணியுங்கள் என்ற கோரிக்கையே வடக்கில் வெற்றி பெற்றுள்ளது .ஏனெனில் வடக்கில் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 2,16,589. ஆனால் தேர்தலை புறக்கணித்தோர் எண்ணிக்கை 2,75,577. அப்படியானால் வடக்கில் வென்றது கஜேந்திரகுமார் பொன்னப்பாலத்தின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கைதான் என்றே கூறப்பட வேண்டும்
சுமந்திரனின் சுத்துமாத்து கதையை நம்புவோர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கைக்கு இலங்கை முழுவதிலும் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பதையும் ஏற்றுகொண்டேயாக வேண்டும். ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் 38,20,738 பேர் வாக்களிக்காது தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
ஆகவே சுமந்திரனின் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கைக்கு வடக்கு கிழக்கில் அவர் உரிமைகோரும் வகையில் மூவினங்களையும் சேர்ந்த 6,76,681 பேர் வாக்களித்துள்ள நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை நாடுமுழுவதிலுமிருந்து 38,20,738 பேர் ஏற்றுக்கொண்டிருப்பதனால் சுமந்திரன் கூறும் ”கதையளப்பு கணக்கு”ப்படி பார்த்தால் சுமந்திரனின் கோரிக்கையை விடவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கையே வெற்றிபெற்றுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது .