பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்கிற சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி ஒரே சமயத்தில் வெடித்ததில் 39 பேர் பலியாகினர். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக லெபனான் மீது பயங்கரமான முறையில் வான்வழி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர்.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 81 பேர் பலியானதாகவும், இதனால் மொத்த பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.