நெல்சன் திலீப் குமார், ஜுனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமான கோலமாவு கோகிலா படம் வெளியாவதற்கு முன்பு நெல்சன் சிலம்பரசன் நடித்த மன்னன் படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாகாமல் போனது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரை வைத்து நெல்சன் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.