கிளிநொச்சி மாவட்டக் கொரோனா பாதுகாப்புச் செயலணியின் விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை(03) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் கொரோனாத் தொற்றுடன் நபரொருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பாதுகாப்புத் தொடர்பில் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களுடன் ஏற்கனவே சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் பல விடயங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 487 பேர் அதாவது 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ள நிலைமையில் தொற்றுப் பரவாது கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்கும் வகையில் மேற்படி கலந்துரையாடலானது இடம்பெற்றிருந்தது.
பொதுமக்கள் அதிகமாக கூடுவதனை தடுப்பதற்கும் முகக் கவசங்கள் அணிந்து செல்வதனை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் நிறுவனங்களிலே சுத்திகரிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்திக் கொள்வதற்குமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பொதுச்சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாகச் சேவை பெறுகின்ற இடங்களினை நாளாந்தம் தொற்று நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதற்கு அமைய பிரதேச சபையின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.