மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த உத்தியோகத்தர் ஒருவர் மர்ம நபர்களில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தரே இவ்வாறு வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்படுகின்றமை அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.