முற்போக்கானவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றழைப்பது அவரது வழக்கம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.குறிப்பாக, ‘பாஜக ஒரு பயங்கரவாத கட்சி’ என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை, நகர்ப்புற நக்ஸல்கள்தான் வழிநடத்துவதாக நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், மல்லிகார்ஜுன் கார்கே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், “முற்போக்கானவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைக்கிறார்கள். இது அவரது (பிரதமர் மோடி) வழக்கம். அவரது கட்சியே ஒரு பயங்கரவாத கட்சிதான். அடிப்பது, தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியின மக்களை பலாத்காரம் செய்வது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை ஆதரிப்பது என அவர்கள் செயல்படுகிறார்கள்.அத்தகையவர்கள் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார்கள்.
இவ்வாறு குற்றம் சொல்ல மோடிக்கு எவ்வித உரிமையும் இல்லை. அவர்களுடைய அரசாங்கம் எங்கு இருந்தாலும், அவர்கள் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக, குறிப்பாக பழங்குடியினருக்கு எதிராக தொடர்ந்து அட்டூழியங்களைச் செய்கிறார்கள். ஆனால், அராஜகங்களுக்கு எதிராக தொடர்ந்து உபதேசிக்கிறார்கள். உங்கள் அரசை நீங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸின் சிந்தனை ஆரம்பத்திலிருந்தே அந்நியமானது. ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே, காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நகர்ப்புற நக்சலைட்டுகளால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவுக்காக நல்ல எண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம்” என குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.