ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவை என்று விமர்சித்துள்ள சிதம்பரம், இது இந்தியாவின் பிரிக்ஸ் (BRICS) கூட்டாளிகள், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா, பெரும்பானமையான தெற்கு உலகுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் தங்களின் எல்லைக்குள் நுழைய தடைவித்தித்திருக்கும் இஸ்ரேலைக் கண்டிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் 104 நாடுகளில் இந்தியா ஏன் இணைந்து கொள்ளவில்லை என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதன்மூலம் இந்தியா அதன் BRICS கூட்டாளிகளான பிரேசில், தென்னாபிரிக்காவின் புரிதல்களை முறித்துள்ளது. மேலும் இந்தியாவுடன் நட்பு மற்றும் நல்லுறவுகளைப் பேணும் தெற்காசியா, மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் உறவினையும் முறித்துக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அலுவலர். அரசியல் வேறுபாடுகளை வெளியேற்றுவதற்கு இருக்கும் ஒரே சர்வதேச அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையே. தங்கள் நாட்டுக்குள் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் நுழைய இஸ்ரேஸ் தடைவிதித்திருப்பது மிகவும் தவறானது. இஸ்ரேலின் செயலைக் கண்டிக்கும் கடிதத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருந்திருக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவால் முன்மொழியப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 104 நாடுகள் ஆதரவு தெரிவித்த அந்த கண்டனக் கடிதத்தில், இஸ்ரேலின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இந்த நடவடிக்கை மோதல்களுக்கு மத்தியஸ்தம் செய்யும், மனிதாபிமான உதவிகளைச் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் திறனை குறைமதிப்புக்குள்ளாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலைக் கண்டிக்காத நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தங்களின் எல்லைக்குள் நுழையத் தடைவிதித்திருந்தது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ‘இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலை கண்டிக்கத் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலுக்கு எதிரானவர். தீவிரவாதிகள், கொலைகாரர்களுக்கு அவர் ஆதரவு தருகிறார். குத்ரேஸ் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு கறையாக நினைவுகூரப்படுவார்.’ என்று சாடியிருந்தார்.