பு.கஜிந்தன்
வடக்கு மற்றும் கிழக்கில் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என்றார்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஈ.சரவணபவனின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் 14-10-2024 அன்று நடைபெற்றபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மக்கள் பக்கம் இருப்பதாக கூறும் அனுர குமார திஸாநாயக்க
இன்னமும் மதுபான சாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடாமல் வைத்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் தான் பார் பெமிட் பட்டியல் வெளிவருமோ தெரியவில்லை.
மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது புலனாகிறது. சிலரிடம் இருக்கிறது. சிலர் இல்லை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். சிலர் வேறு பெயர்களில் மாற்றி வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன. பணப்பரிமாற்றங்களும் நடந்து முடிந்துவிட்டது.
தேர்தலுக்கு பின்னர் அனுர குமார திஸாநாயக்க பெயர் விபரங்களை வெளியிடுவதால் எந்த பிரியோசனமும் இல்லை.
நீங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு என எங்கும் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதாக இருந்தால் உண்மையை வெளியிடுங்கள் – என்றார்.
இது இவ்வாறிருக்க. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் தான் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மறைந்த இரா. சம்பந்தன் அவர்களின் மறுப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் தனது இல்லத்தில் நடைபெற்ற தனது புதல்வியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அந்த ஜனாதிபதியாக இருந்தவரை அழைத்து விருந்தளித்தவர் என்பதும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் இன்று சிறையில் வாடிய வண்ணம் தமது இளைமைக் காலத்தின் சுகங்களை இழந்தவர்களாய். கல்விவாய்ப்புக்களை இழந்தவர்களாய் வாடி வதங்கி அடைபட்டு இருக்கையில் தனது இல்லத்திற்கு ஜனாதிபதியை அழைத்து கொண்டாடியவர். இந்த வாய்ப்பு இவருக்கு எவ்வாறு கிடைத்தது? மக்கள் அவருக்கு தமிழ்ப் பிரதிநிதி என்றவகையில் அளித்த வாக்குகள் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆகியமையால் தானே? என்று யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியாகி உள்ளதாகவும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.