ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது, நாளுக்கு நாள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணய கைதிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், மறுபக்கம் ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கியது. மேலும், இந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்குப் போருக்கான ஆயுதம், போருக்கான தேவையான நிதியுதவி போன்ற பல உதவிகளை அமெரிக்கா இஸ்ரேலுக்குச் செய்து வந்தது. மேலும், போரில் தேவைப்பட்டால் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தாக்கவும் முற்படுவோம் எனக் கூறியிருந்தது. அதே போல ஈரானுக்கு ஆதரவாக ஒரு சில அரபு நாடுகளும் குரல் கொடுத்தது.
இப்படி இருக்கையில், லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில் தற்போது லெபனான் நாட்டுக்கு ஆதரவாக ஆகிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்துள்ளது. லெபனானுக்கு துணை நிற்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் அதிபரான ஷேக் முகமது பின் சையத் அல் நஹியான் மேற்பார்வையின் கீழ், லெபனான் நாட்டிற்கு உதவிக்காக 2 வாரக் காலம் பிரசாரம் தொடங்கப்பட்டது. அதன்படி, உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் ஐக்கிய அரபு அமீரக மக்கள், லெபனானுக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றனர். போர் சூழல் தொடங்கியதிலிருந்து, லெபனான் நாட்டு மக்களுக்கு அவசர உதவியாக, ரூ.840 கோடி தொகையை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி இருக்கிறது. மேலும், சிரியாவில் உள்ள லெபனான் அகதிகளுக்கு உதவியாக ரூ.252 கோடி வழங்கி இருக்கிறது. இப்படி, மொத்தமாக 450 டன் அளவுகொண்ட நிவாரண பொருட்களை 10 நிவாரண விமானங்களில், இதுவரை லெபனானுக்கு ஐக்கிய அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.