இந்தியாவில் கடும் குற்றங்களில் ஈடுப்பட்டிருந்த லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவுடன் இணைந்து, தமது மண்ணில் இந்திய அரசாங்கம் குற்றச்செயல்களிர் ஈடுப்பட்டு வருவதாக கனேடிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மும்பையில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாபா சித்திக் கொல்லப்பட்டமைக்கு லோரன்ஸ் பிஸ்னோய் குழுவினரே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.குறித்த குற்றச்சாட்டானது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் இராஜதந்திர பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸின் உதவி ஆணையர் பிரிஜிட் கவுவின், “பிஸ்னோய் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைப் பயன்படுத்தி கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான தரப்பினரை இந்தியா குறிவைக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய தரப்பினர், கனடாவில் உள்ள காலிஸ்தான் சார்பு பிரிவுகளை குறிவைக்க பயன்படுத்துகிறார்கள். இது பகிரங்கமாக உரிமை கோரப்பட்டுள்ளதாகவும் பிரிஜிட் கவுவின் தெரிவித்துள்ளார்.
எனினும் கனடாவின் இந்த கடும் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் பதில் இன்னும் வெளியாகவில்லை எனவும், போதைவஸ்து குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், 2022 இல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, 2023 இல் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி உட்பட பல உயர்மட்டத்தினரின் கொலைகளுக்கும், கனடாவில் வசிக்கும் பாடகர்கள் ஏபி டிஹ்லொன் மற்றும் ஜிப்பி கரேவால் ஆகியோரின் வீட்டின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தையும், லோரன்ஸ் பிஸ்னோயே வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 இல் கனடா பிரிட்டிஸ் கொலம்பியாவில் கொல்லப்பட்ட சீக்கிய அமைப்பின் தலைவரான நிஜ்ஜார் சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடாவின் அரச தரப்பு குற்றம் சுமத்தி வருகிறது. இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 பேர் இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இணைக்கப்பட்டதாக கூறி, இந்தியா கனடாவில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகர் வர்மாவை திருப்பியழைப்பதாக அறிவித்தது.
அத்துடன் இந்தியாவில் கடமையாற்றும் கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 பேரையும் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு இந்தியா கேட்டுக்கொண்டது.இந்திய தூதர்களின் பாதுகாப்பில் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலடி வழங்கும் வகையில், கனேடிய அரசாங்கமும், இந்தியாவினால் திருப்பியழைக்கப்பட்டதாக கூறப்பட்ட உயர்ஸ்தானிகர் மற்றும் 6 இராஜதந்திரிகளை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த கசப்பான சம்பவங்கள் நேற்றைய தினத்தில் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.