”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதான மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள்,,கைதுகள், வழக்குகள் ,அதிரடி ஆட்டங்களுக்கான ”அறிகுறிகள்”இந்த ஒரு மாத கால அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ளதா?,ஊழல்வாதிகள்,மோசடிக் காரர்கள்,குற்றவாளிகள் ,வர்த்தக மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஜனாதிபதியாக மக்கள் மனதை வென்றுள்ளாரா?மக்கள் அவரின் ஒரு மாத கால ஆட்சியில் திருப்தியடைந்துள்ளனரா?”
கே.பாலா
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி.),தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.)ஆகிய கட்சிகளின் தலைவரான அநுர குமார திசாநாயக்க பதவியேற்று கடந்த 23 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. மக்களின் பெரும் எதிர் பார்ப்புகள், ,நம்பிக்கைகள் மத்தியிலும் மக்களின் 2ஆவது ”அரகலய” புரட்சி மூலமும் 56,34,915 நேரடி வாக்குகள், 1,05,264 விருப்பு வாக்குகள் என்ற அடிப்படையில் 57,40,179 மொத்த வாக்குகளைப் பெற்றே ஜனாதிபதிக் கதிரையை வெற்றி கொண்டுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்கவின் இந்த புரட்சிகர வெற்றிக்கு நாட்டில் இடம்பெற்ற ஊழல்,மோசடிகள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல், ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அராஜகங்கள் அவலங்கள், பொருளாதார நெருக்கடிகள் , வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்களுக்கு அப்பால் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியதுடன் அநுரகுமார திசாநாயக்க என்ற ஒரு தனிப்பட்ட தலைவர் மீதும் அவரது ஆக்ரோஷமான உரைகள் மீதும் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடும் எதிர்பார்ப்பும் ஒரு தூய்மையான ஆட்சி ஏற்பட வேண்டுமென்ற விருப்புமே அவரின் வெற்றிக்கு காரணங்களாகவுள்ளன.
அதனால் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவையும் சஜித் பிரேமதாசவையும் எதிர்த்து போட்டியிட்டு வெறுமனே 4,18,553 வாக்குகளைப்பெற்று கட்டுப்பணத்தையும் இழந்த அநுரகுமார திசாநாயக்கவுக்குத் தான் இம்முறை பலம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாச ஆகியோரை தோற்கடித்து 56,34,915 நேரடி வாக்குகளை அளித்து”நம்பிக்கை” ,”எதிர்பார்ப்பு”அடிப்படையில் ஜனாதிபதியாக்கியுள்ளதுடன் ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க”வின் ஊழல்வாதிகள்,மோசடிக்காரர்கள்,குற்றவாளிகள் ,வர்த்தக மாபியாக்களுக்கு எதிரான அதிரடி ஆட்டத்துக்காக காத்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதான மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள்,காய் நகர்த்தல்கள்,கைதுகள், வழக்குகள் ,அதிரடி ஆட்டங்களுக்கான ”அறிகுறிகள்”இந்த ஒரு மாத கால அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ளதா?,அவர் ஜனாதிபதியாக மக்கள் மனதை வென்றுள்ளாரா?மக்கள் அவரின் ஒரு மாத கால ஆட்சியில் திருப்தியடைந்துள்ளனரா என்று பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானவுடன் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் சிறை செல்வார்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், மத்தியவங்கி மோசடியாளர்கள் மடக்கப்படுவார்கள், ஊழல் ,மோசடி அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளினால் சிறைகள் நிரம்பும், வாழ்க்கைச்செலவுகள் குறைவடையும், வளமான வாழ்க்கை வாழமுடியும் என ”நம்பிக்கை”வைத்த மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய எந்தவொரு அதிரடி அறிவிப்புக்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து இதுவரையில் வெளிவரவில்லை என்பதே உண்மை .
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கான மானிய அறிவிப்புக்கள் கூட தேர்தல்கள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கைகளை கடுமையாக விமர்சித்து ,அதை வைத்தே ஆட்சிக் கதிரையை கைப்பற்றிய அநுர குமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுடன் ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்ட கடன் உடன்படிக்கைகளை அச்சுப் பிசகாது தானும் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்டு கடன்பெறும் ”தவிர்க்கமுடியாத அரசியல்”செய்வது அநுர குமார கொடுத்த வாக்குறுதி மீது மக்கள் வைத்த நம்பிக்கைகக்கு,எதிர்பார்ப்புக்கு மாறாகவுள்ளது
அடுத்ததாக எதிர்க்கட்சியாக அநுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி இருந்த போது அரசுக்கு எதிராக முன் வைத்த ஆயிரக்கணக்கான ஊழல்.மோசடிக் குற்றச்சாட்டு கோப்புகளில் ஒன்றைக்கூட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதுவரையில் தூசுகூடத் தட்ட வில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை எமக்குத்தெரியும். நாம் ஆட்சிக்கு வந்தால் எமது முதல் வேட்டை அவர்கள்தான் என சூளுரைத்த அநுரகுமார திசநாயக்க இன்று அது தொடர்பில் மௌனம் காக்கின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் அநுர குமாரவினால் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட ரவி செனவிரத்ன,குற்றப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகர ஆகியோரே என எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை முன்வைத்துள்ளமையும் மக்களை குழப்ப நிலைக்கு தள்ளியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதுடன் இடம்பெற்ற ஆளுநர்கள் நியமனத்தில் மேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் பலவேறு விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் அந்த ஆளுநரை அவர்சார் சமூகத்தினர் கூட கடுமையாக விமர்சிப்பதும் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களும் பண முதலைகளுக்கோ தகுதியற்றவர்களுக்கோ அரச நியமனங்கள் வழங்கப்படாது என அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி மொழியையும் அதன் மூலம் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதுடன் இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் அவரை சந்திக்க படையெடுத்தனர். இந்த சந்திப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகளில் வெளிநாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்த கருத்துக்களும் வழங்கிய உறுதிமொழிகளும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன . எந்தவொரு ஊடக அறிக்கையிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள்,வழங்கிய உறுதிமொழிகள் குறிப்பிடப்படாது கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தன. இது அநுரகுமார அரசு வெளிநாட்டுக் கொள்கையில் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அநுர குமார அரசில் மக்கள் பெரும் எதிர் பார்ப்பு வைத்திருந்த விடயம் பொருட்களின் விலை குறைப்பு. வர்த்தக மாபியாக்கள் மற்றும் தரகுப் பணம் பெறுவதை நிறுத்தி அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தனர் . இதுவரை வர்த்தக மாபியாக்களையோ கமிஷன் எடுப்பதையோ அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசால் பொருட்களின் விலையை குறைக்க முடியாது விட்டாலும் பரவாயில்லை பொருட்களின் விலைகள் அதிகரிக்காமலாவது வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் அரசினால் எதுவும் முடியவில்லை. சந்தையில் அரிசி, முட்டை, தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பெரும் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன . எரிவாயு , மின்சாரம், வரி குறைக்கப்படும் எனக் கூறினாலும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதாக தெரியவில்லை. அதற்கான வேலைத்திட்டமும் இல்லை. இதனால் மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அநுரகுமார அரசின் இவ்வாறான பலவீனங்கள் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவலையாக இருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம்,தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை , மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க அரசு கொண்டுள்ள இனவாதப் போக்கும் அவரின் கட்சியினர் வெளிப்படுத்தும் இனவாதக் கருத்துக்களும் தமிழ் மக்கள் அநுரகுமார மீதும் அவரின் ஆட்சி மீதும் வைத்திருந்த நம்பிக்கை எதிர்பார்ப்புகளை இந்த ஒரு மாத காலத்தினுள்ளேயே தவிடு பொடியாக்கியுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதும் அவரின் ஆட்சி மீதும் மக்கள் வைத்த ”நம்பிக்கை”,”எதிர்பார்ப்பு” வலுவிழந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் ”ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க 2 அமைச்சர்களை வைத்துக்கொண்டு எந்த விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் தற்போது எடுக்க முடியாது. நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை,பலத்தை அநுரகுமார திசாநாயக்கவுக்கு கொடுத்தால்தான் அவர் தான் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். அதனால்தான் அவர் பாராளுமன்றத் தேர்தல் முடியும்வரை காத்திருக்கின்றார்.பாராளுமன்ற பலம் கிடைத்தவுடன் அவரின் ஆட்டம் ஆரம்பமாகும் என அவரின் கட்சியினர் ”சாக்குப் போக்கு”கூறத் தொடங்கியுள்ளனர் .
தேசிய மக்கள் சக்தியினர் கேட்டது போல் ஜனாதிபதி பதவியைக் கொடுத்த மக்கள் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மைப் பலத்தைக் கொடுத்தால் கூட பெரிதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் எதனையும் சாதித்து விட முடியாது. ஏனெனில் இலங்கை அரசியல் கலாசாரம் அப்படிப்பட்டது.அரசின் ஊழல் ,மோசடிகள்,தவறுகள் குறைபாடுகள், குற்றங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதும் பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது முன்னைய அரசு செய்த அதே ஊழல் ,மோசடிகள்,தவறுகள் குறைபாடுகள், குற்றங்களை செய்வதும்,கடந்த ஆட்சியில் குற்றங்களை செய்தவர்களை தண்டிக்காமல் விடுவதும் தான் எழுதப்படாத விதியாகவுள்ளது. இந்த விதியை மாற்றுவதென்பது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மணலில் கயிறு திரிப்பது போன்றுதான் இருக்கும்
எதிர்க்கட்சியாக வெளியில் இருந்து ஆட்சியாளரை ஆக்ரோஷமாக விமர்சித்த அநுரகுமார திசநாயக்கவுக்கு தற்போது ”ஜனாதிபதி கதிரை ஒரு முள் படுக்கை, ஜனாதிபதி பதவி ஒரு முள் கிரீடம் என்பதும்.என்ன பண்ண முடியும், என்ன பண்ண முடியாது என்பதும் ஓரளவுக்காவது புரிந்திருக்கும். அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜனாதிபதியாக இந்தளவுக்கு மட்டும்தான் செய்ய முடியும் என்பதனை அவர் மீது ”பெரு நம்பிக்கை”,”எதிர்பார்ப்பு”வைத்த மக்களும் இந்த ஒரு மாத ஆட்சியில் ஓரளவு புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் தன் மீது வைத்த ”நம்பிக்கை”எதிர்பார்ப்பு”க்களினால் எழுச்சி பெற்று எட்டமுடியாத ஜனாதிபதி கதிரையை எட்டிப்பிடித்த அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்களின் அந்த அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே சிலவேளைகளில் ”வீழ்ச்சி”யை கொடுத்தாலும் கொடுக்கலாம்.