பிரபல ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் கொலை சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் பொறுப்பேற்றது நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இந்திய அரசு கொன்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டை எழுப்பியது. இதனிடையே, இந்தி நடிகர் சல்மான் கானை பலமுறை பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய முயற்சித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் என்ஐஏவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மோல் பிஷ்னோய் மீது 2022ஆம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.