வடக்கில், கடற்படைக்கு காணி ஒன்றை கையகப்படுத்தும் முயற்சியை தடுப்பதில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அப்பகுதி மக்கள் வெற்றி கண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பெரியகுளம் கலங்கரை விளக்க கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்காக கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நில அளவை திணைக்கள அதிகாரிகள் வந்த போது, காணி உரிமையாளருடன் குறித்த இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், தொடர்ந்து பலனளிக்காத இந்த முயற்சியை கைவிடுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
“நில அளவைத் திணைக்களமும், பிரதேச செயலகமும், பொது மக்களும் விரும்பாத, உரிமையாளரும் விரும்பாத காணி அளவீட்டுக்காக எத்தைனையோ முயற்சிகள் எடுத்தும் அது கைகூடாத நிலையில், காணி அளவீட்டை மேற்கொள்ளும் செற்பாட்டை கைவிடுவது பொறுத்தமான செயல் என அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.”
பொதுநலனுக்கான என்றாலும், உரிமையாளரின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் காணி அளவீடு சட்டவிரோதமான செயல் என சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
“உரிமையாளர் விரும்பாத இடத்தில் பொது நலனுக்காக காணியை அளவீடு செய்வது சட்டத்திற்கு முரணான செயல். இது பொது பொது நலனுக்காக எடுக்கப்படலாம், ஆனால் உரிமையாளரும், பொது மக்களும் எதிர்ப்பது பொது நலனாக இருக்க முடியாது.”
தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையினருக்காக கையகப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியின் கீழும் எவ்வித மாற்றமும் இன்றி இந்த முயற்சி தொடர்வதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.