ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனை எதிர்த்து சண்டையிட உள்ள வடகொரியா வீரர்கள் குர்ஸ்க் நகரில் முகாமிட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கான முழு செலவையும் ரஷியா ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஏற்கனவே சீருடைகள், போலி அடையாள ஆவணங்களை வழங்கி வடகொரியா வீரர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.