யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்.
சுமந்திரனின் பிரச்சார விளம்பரக் குறிப்பு ஒன்றில், அவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியை பெருமளவுக்குத் தத்தெடுத்துவிட்டார் என்று தெரிந்தது.அந்தப் பேரணிக்கு அவரும் சாணக்கியனும் உரிமை கோருவதுபோல அந்த விளம்பரம் அமைந்திருந்தது. ஏனையவர்கள் பின்னர் வந்து ஒட்டிக் கொண்டார்கள் என்றும் அதில் காணப்படுகிறது. சுமந்திரனின் பிரச்சார காணொளிகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் தமிழரசியலில் அவரைப்போல உத்தமரைக் காண முடியாது என்று நம்பும் அளவுக்கு அவருடைய பிரச்சாரங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு உத்தமரை ஏன் தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை?
அப்படித்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் காணொளிகளைப் பார்த்தால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தத்தெடுப்பதற்கு அவர்களைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை என்பது போல ஒரு தோற்றம் எழும். தங்களை விட வேறு தியாகிகள் இல்லை என்று நிரூபிப்பவையாக அவை காணப்படும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் செய்த தியாகங்கள் எத்தனை?
இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் பிரச்சாரக் காணொளிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு சித்திரம் கிடைக்கும்?
இது தேர்தல் காலம் மட்டுமல்ல, மாவீரர் மாதமும்கூட.கட்சிகளும் அரசியல்வாதிகளும் மண்வெட்டியோடு துயிலும் இல்லங்களின் முன் நின்று காட்சி கொடுக்கிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறும் தங்களுக்கு தான் அந்த உரிமை அதிகம் என்று. தவராசா கூறக்கூடும்,பெருமளவு அரசியல் கைதிகளை தான் விடுவித்தபடியால் தனக்கு அவ்வாறு துயிலும் இல்லத்தின் முன்னின்று படம் எடுப்பதற்கு தகுதி உண்டு என்று. மாவீரர்களின் நினைவுகளை தேர்தல் நோக்கத்துக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும்,யதார்த்தத்தில் மாவீரர் நினைவுகள் தேர்தல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் என்பது மட்டும் தெரிகிறது.
கிழக்குடன் ஒப்பிடுகையில் வடக்கு மைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அதிகம் டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் வெளியிடும் சிறிய துண்டுக் காணொளிகளில் பெரும்பாலானவர்கள் தங்களை சினிமாத்தனமாக கதாநாயகர்களாக கட்டமைக்கிறார்கள். பின்னணியில் ஒரு சினிமா பாடல் வரும். ஆனால் பலருடைய உடல் மொழிக்கும் பாடலுக்கும் பொருந்தவே இல்லை. அதை யார் அவர்களுக்குச் சொல்வது?
தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் மத்தியில் முன்பு பொங்கு தமிழில் ஈடுபட ஒரு பெண் செயற்பாட்டாளர் உண்டு.வன்னியில் சங்குச் சின்னத்தின் கீழ் ஒரு முன்னாள் இயக்க உறுப்பினராகிய பெண் போட்டியிடுகிறார்.இந்த இரண்டு பெண்களுடைய பிம்பங்களையும் அவர்களுடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டுக் கட்டி எழுப்புகிறார்கள்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்கும் பொங்குதமிழ்ச் செயற்பாடடாளர் தனக்கென்று பாடல்களை உருவாக்கி தனக்குரிய டிஜிற்றல் புரொமோஷனை முன்னெடுக்கிறார்.தன்னைப் பொங்கு தமிழின் வாரிசாகக் காட்டுகிறார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் இயக்கத்தவர் போரில் காலை இழந்தவர்.அவர் தன்னை எப்படித் தனித்துவமாகக் இனங்காட்ட வேண்டும் என்பதில் ஏனைய எல்லா வேட்பாளர்களை விடவும் பிரக்ஞைபூர்வமாக காணப்படுகிறார்.அவர் அணியும் சேலை,பிளவுஸ் அவற்றின் நிறம், என்பவற்றில் அவர் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தைப் பேண முற்படுகிறார். அவருக்காக முன்னாள் இயக்கத்தவர்கள் பலர் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்காக இறங்கி செயல்பட்ட பலரும் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.அவர் தன்னை ஈழப்போரின் வாரிசாக காட்டிக் கொள்வதில் தவறு இல்லை.ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தில் ஒரு காலை இழந்தவர்.ஆயுதப் போராட்டம் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட 15 ஆண்டுகளின் பின் மிதவாத அரசியலில் குதித்திருக்கிறார்.
இங்கு ஒரு முரண்பாட்டைச் சுட்டிக்காட்டலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் பொங்கு தமிழ் பாரம்பரியத்தின் ஊடாக வந்தவர்.அவர் தன்னை எப்பொழுதும் விடுதலைப் போராட்டத்தின் நேர் வாரிசு போல காட்டிக் கொள்வார். அவருடைய பிரச்சாரங்களிலும் அதைக் காண முடியும். போலீசுக்கு எதிராக புலனாய்வுத் துறைக்கு எதிராக அவர் வீரங்காட்டும் காட்சிகள் காணொளிகளாக வெளியிடப்படுகின்றன. ஆனால் அதே பொங்கு தமிழ் பாரம்பரியத்தில் வந்த ஒரு பெண் சுமந்திரன் அணிக்குள் நிற்கிறார். அவரும் தன்னைப் பொங்கு தமிழின் வாரிசாகக் காட்டுகிறார்.
அப்படித்தான், வன்னி தேர்தல் தொகுதியில்,சங்கின் கீழ் போட்டியிடும் அந்த முன்னாள் இயக்கப் பெண்ணின் பிரச்சார வாசகங்கள் அவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வாரிசாகக் காட்ட முற்படுகின்றன. ஆனால் அவர் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடவில்லை. சசிகலா ரவிராஜும் அப்படித்தான். அவர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி சங்குச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார். சசிகலா தன்னை ரவிராஜின் வாரிசாக முன் நிறுத்துகிறார்.
எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசுகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழக்க கொடுத்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில், ஜேவிபியின் திசைகாட்டி சின்னத்தின் கீழ் போட்டியிடும் ஒரு அதிபர் தன்னை கடைசிக் கட்டப் போரில் வன்னியிலிருந்து காயத்தோடு தப்பி வந்தவராகப் பிரச்சாரம் செய்கிறார்.ஆனால்,2009ஆம் ஆண்டு அவர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டதாக அவருக்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். கடைசிக்கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தமை,காயப்பட்டமை, இடம்பெயர்ந்தமை,போன்றவை தேர்தலில் நிற்பதற்கான தகுதிகளாக மாறிவிட்டன. பொங்கு தமிழில் பங்கெடுத்தமை, பொலிஸோடு மோதியமை, புலனாய்வுத்துறையோடு வாக்குவாதப்பட்டமை எல்லாமே தகுதிகள்.
அர்ஜுனா மருத்துவத்துறையில் தான் புரிந்த கலகம் தனக்குரிய அடிப்படைத் தகுதி என்று கருதுகிறார். ஆனால் கடந்த வாரம் ஒரு மெய்நிகர் சந்திப்பில் அவரும் ஏனையவர்களும் மோதிக்கொண்ட விதம் அவரை மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியல் கலாச்சாரத்தையே பரிசு கெடுக்கக்கூடியது.
அர்ஜுனாவைப் போலவே மற்றொரு சுயேச்சை. டியூப் தமிழ் என்று அழைக்கப்படும் ஒரு யுடியுப் காணொளியைச் சேர்ந்த பெண். இவரும் ஆயுதப் போராட்டப் பின்னணி காரணமாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டவர்.தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் அவர் தன்னுடைய அணியோடு வரும்பொழுது எல்லாரும் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்கள்.
வன்னியில் மற்றொரு சுயேச்சை எமில் காந்தன். இவரும் போராட்டப் பின்னணிக்குள் காணப்பட்டவர். நாட்டுக்கு வெளியே வாழ்ந்தவர். நிறையக் காசு வைத்திருக்கிறார். வன்னியில் அதிகம் செலவழிக்கப்படும் பிரச்சாரக் கூட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகள் அவருடையவைதான் என்ற ஒரு அவதானிப்பு உண்டு.
யாழ்ப்பாணத்தில் அவரைப் போல அதிகமாகச் செலவழிப்பது அங்கஜன். கடந்த பொதுத் தேர்தலின் போதும் அவர் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்தவர். கடந்த பொதுத் தேர்தலின் போதும் அவர் தன்னுடைய பிரச்சார வாகனங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல்களை ஒளி பரப்பியவர். இம்முறையும் அவர் போராட்டத்தைப் போற்றுகிறார்.ஆனால் அவர் தேர்தல் கேட்பது தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் வேட்பாளராக.
அவரும் அதிகரித்த அளவில் டிஜிட்டல் புரோமோஷனில் ஈடுபடுகிறார். அவருடைய பிரச்சாரக் காணொளிகள் அதிகமாக வெளிவருகின்றன. அங்கெல்லாம் அவர் ஒரு கதாநாயகனாக கட்டமைக்கப்படுகிறார்.
கட்சிகளும் தங்களை போராட்டத்தின் வாரிசுகளாகக் காட்டப் பார்க்கின்றன. சுயேச்சைகளும் அப்படித்தான். இதில் யார் உண்மையான போராட்டத்தின் வாரிசு என்பதை வாக்காளர்கள் எப்படிக் கண்டுபிடிப்பது?
இம்முறை தேர்தல் களத்தில் ஒரு துலக்கமான வேறுபாட்டைக் காண முடியும். என்னவென்றால், பெருமெடுப்பிலான பொதுக்கூட்டங்கள் இதுவரையிலும் யாராலும் ஒழுங்கு செய்யப்படவில்லை.தேர்தல் பிரச்சாரங்களில் பெரும் கூட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வாக்களிப்பு அலையை உருவாக்குவதில் பெரும் கூட்டங்களுக்கு பெரிய பங்கு உண்டு. ஆனால் இந்த முறை எந்த ஒரு கட்சியும் தாயகத்தில் இதுவரை பெருங் கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுக் கட்டமைப்பு எல்லா மாவட்டங்களிலும் பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் இப்பொழுது கட்சிகள் பெருங்கூட்டங்களில் ஆர்வம் காட்டவில்லை. ஏன் கட்சிகளிடம் காசு இல்லையா? அல்லது டிஜிட்டல் புரோமோஷன் மட்டும் காணும் என்று அவை கருதுகின்றனவா? அல்லது ஒரு சுயேட்சை வேட்பாளர் கூறியது போல சுயேட்சைகள் மற்றும் கட்சிகளுக்குள்ளேயே உருகிப் பிணைந்த ஐக்கியம் இல்லை என்பதனாலா? ஒவ்வொருவரும் மற்றவரைப் போட்டியாளராகப் பார்க்கின்றார்கள். அதனால் ஒரு ஒரு பொதுக்கூட்டத்துக்காக செலவழித்து மற்றவர்களுக்கும் சேர்த்து வாக்குத் திரட்ட அவர்கள் தயாரில்லை என்று மேற்படி சுயேச்சை வேட்பாளர் சொன்னார்.
அதாவது ஒரு பொதுக்கூட்டம் என்று சொன்னால் எல்லாரும் சேர்ந்து காசைப் போட்டு அதை ஒழுங்குபடுத்த வேண்டும். அதனால் திரளக் கூடிய வாக்குகள் பொதுவானவை. அவை அந்த கட்சிக்கு அல்லது சுயேச்சைக்கு பொதுவாக விழும். ஆனால் தான் போட்ட காசுக்கு தனக்கு மட்டுமே வாக்கு விழ வேண்டும் என்று ஒரு வேட்பாளர் கருதினால், அவர் தனக்கு மட்டும்தான் பொதுக்கூட்டம் நடத்துவார். தனது கட்சிக்கோ அல்லது தனது சுயேச்சைக்கோ பொதுக்கூட்டம் நடத்த விரும்ப மாட்டார். எப்படியிருக்கிறது தேர்தல் களம்?
இது வாக்காளர்கள் மத்தியில் உற்சாகத்தை உத்வேகத்தைக் குறைக்குமா?
சில வாரங்களுக்கு முன்பு பொதுத்தமிழ் வேட்பாளருக்காக ஒன்றாக நின்றவர்கள் இப்பொழுது வேறு வேறு சின்னங்களின் கீழ் நிற்கின்றார்கள். பொதுச் சின்னமாகிய சங்கும் பொது வேட்பாளர் ஆகிய அரியநேத்திரனும் ஒன்றுக்கொன்று எதிராகி விட்டார்கள். பொதுச் சின்னமாகிய சங்கு இப்பொழுது ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக மாறிவிட்டது.பொது வேட்பாளர் ஆகிய அரியநேத்திரன் தன்னுடைய தமிழரசுக் கட்சி நண்பர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பிரச்சாரம் செய்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் அவருக்காகப் பிரச்சாரம் செய்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் இப்பொழுது சங்குச் சின்னத்துக்கு எதிராக நிற்கிறார்கள்.அதாவது பொது வேட்பாளருக்கு எதிராக பொதுச்சின்னம்?
இதுதான் ஒட்டுமொத்த தேர்தல் கள நிலவரம். இது வாக்காளர்களை அதிகம் குழப்பும். ஒரு தொகுதி வாக்காளர்கள் பழகிய சின்னம் பெரிய கட்சி என்று பார்த்து வீட்டுக்கு வாக்களிக்கக் கூடும்.இன்னொரு தொகுதி அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்று கருதி சங்குக்கு வாக்களிக்கக் கூடும். இன்னொரு தொகுதி எல்லாருமே கள்ளர்கள் இரண்டு கஜன்களும்தான் சுத்தமான தங்கங்கள் என்று நம்பி சைக்கிளுக்கு வாக்களிக்கக் கூடும்.
பெரும்பாலான சுயேச்சைகள் வாக்குகளைச் சிதறடிப்பதோடு வாக்காளர்களையும் குழப்பக்கூடும்.ஆனால் யார் குழப்பினாலும் எந்தச் சின்னம் குழப்பினாலும், தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதுதான் அது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை.சுயேச்சைகளுக்கு இடையே ஒற்றுமையில்லை.உண்மைதான்.ஆனால் அதற்காகச் சலிப்படைந்து விரக்தியடைந்து தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. விழுகிற ஒவ்வொரு தமிழ் வாக்கும் ஏதாவது ஒரு தமிழ்த் தேசிய வேட்பாளருக்கு விழுவதுதான் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானது. ஏனென்றால் மீன் கரைந்தாலும் சட்டிக்குள் இருக்கட்டும்.